மாடலிங் நிகழ்ச்சி ஒன்றில் கேட் வாக் செய்துகொண்டிருந்த 26 வயதே ஆன ஆண் மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிரபல பிரேசில் மாடல், டேல்ஸ் சோரஸ் (Tales Soares). வயது 26. பிரேசிலில் உள்ள சாவோ பாலோ (Sao Paulo) என்ற நகரில் நேற்று நடந்த பேஷன் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். மேடையில் கேட் வாக் செய்துகொண்டிருந்தவர் பார்வையாளர்களை நெருங்கிச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார் . அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென விழுந்தார். இதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது.

துவக்கத்தில் இதுவும் பேஷன் ஷோவில் ஒரு நிகழ்ச்சி என நினைத்து அங்கிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்துதான் அவர் கீழே விழுந்துவிட்டார் என்பது தெரியவந்தது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சோரஸுக்கு உடல்நலக்குறைவு எதுவும் இருந்ததா அவரது மரணத்தில் வேறு சதிகள் இருந்ததா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிகழ்ச்சி மேடையிலேயே பிரபல மாடல் ஒரு வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.