படம் சுமார்தான் என்ற நிலையிலும் விஜய்யின் ‘பிகில்’நான்காவது நாளாக நல்ல வசூலைப் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவரது வீட்டிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய ஒரு வாலிபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பல அரசியல் பஞ்சாயத்துகளைத் தாண்டி ரிலீஸான விஜய் அட்லி கூட்டணியின் ‘பிகில்’படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது.  ‘பிகில்’படத்தால் எந்த வகையில் பாதிக்கப்பட்டாரோ தெரியவில்லை, அதில் பேசிய வாலிபர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர். நீலாங்கரையில்  உள்ள விஜய்யின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் விஜய்யின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால்  இந்த சோதனைகளில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

பிகில் படத்தால் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்புக்குள்ளாகி அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி தொடங்கியது. அப்போது போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரே மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது. அவரை உடனடியாகக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அஜீத் ரசிகரா, அட்லியால் கதை பறிப்புக்கு ஆளானவர்களில் ஒருவரா அல்லது குடிபோதைக் கோமாளியா என்பது விசாரணையில் தெரியவரும்.