இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சுகாதாரத்துறை திண்டாடி வருகிறது. நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் ஒரே நாலில் 8 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 202 ஆகவும், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

 

மும்பையில் தீயாய் பரவும் கொரோனா தொற்றுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாலிவு திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறித்து நடிகர் அமிதாப் பச்சனே ட்வீட் செய்துள்ளார்.

 

அதில் “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

 

தற்போது 77 வயதாகும் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவர் நலம் பெற வேண்டிய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.