பாலிவுட்டின் பிதா மகன் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமிதாப் பச்சனுக்கு அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிதாப் பச்சனே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.அதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் ஆகியோருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் ட்வீட் செய்துள்ளார்.

அதில்,  “எனக்கும், எனது தந்தைக்கும் கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டது . லேசான அறிகுறிகள் இருப்பதால்  இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். குடும்ப உறுப்பினர்கள்,  ஊழியர்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.