உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சியான டிஸ்கவரியில்  ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி "மேன் வெர்சஸ் வைல்டு". அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அசத்தியமான சூழ்நிலைகள் உயிர் பிழைப்பதற்கான யுக்திகளை கற்றும் கொடுக்கும் நிகழ்ச்சி "மேன் வெர்சஸ் வைல்டு" நிகழ்ச்சியை பேர் கிரில்ஸ் இயக்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா, பாரத பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இவர்களை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா வனப்பகுதியில் நடைபெற்றது. இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

படப்பிடிப்பிற்காக வனத்துறை அதிகாரிகள் அளித்துள்ள அனுமதி இன்றுடன் நிறைவடைய உள்ளதால், படக்குழுவினர் தீயாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காட்டுத்தீ எளிதில் பரவ வாய்ப்புள்ள பகுதியில் எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என வனத்துறைக்கு விலங்குகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதற்கு பதிலளித்துள்ள வனத்துறையினர் படப்பிடிப்பிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், படக்குழுவினர் அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதே வனப்பகுதியில் தான் கடந்த செவ்வாய்கிழமை அன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேர் கிரில்ஸ் படப்பிடிப்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.