ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதன் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்க பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு தொடங்கப்பட்டது. அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் எனப் பல்வேறு நடிகர்கள் இதில் இணைந்திருந்தனர். 

முதல் பாகத்தில் ஊழல் பிரச்னையைப் பற்றி பேசியிருந்த ஷங்கர்,  இதைத் தொடர்ந்து 2-ஆம் பாகமான இதில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அவலங்களை பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கமலுடன் முதல் முறையாக விவேக் சேர்ந்து நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில் விவேக் நடித்தார். 

முதல்கட்ட படப்பிடிப்புக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் அதிகமான இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சினைகள், கமலின் தேர்தல் பிரச்சாரம் ஆகியவை படப்பிடிப்பு தள்ளிப்போனதாக சொல்லப்பட்டது.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த 12ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிப்பதால் அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்றுவரும் நிலையில், அதில் வாரத்தில் 2 நாள்கள் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்புக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டுவிடாமல் இருக்க கவனமுடன் அவருக்கான தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க இந்தி முன்னணி நடிகர்களிடம் பேசினார்கள். ஆனால் தேதிகள் சரியாக வராததால் தமிழ் நடிகரே வில்லனாக நடிக்க இருக்கிறார். படத்தின் வில்லனாகத் தற்போது ஜிகர்தண்டா படத்தின் மூலம் மிரட்டல் வில்லனான பாபி சிம்ஹா கமிட்டாகியுள்ளார். இதுவரை வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது பாபி சிம்ஹாவே வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. 

ஆக நம்ம சேனாபதி தாத்தாவை எதிர்க்கப்போறாரா இந்த அசால்ட் சேது!