நாளை மறுநாள் வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் ‘அக்னி தேவி’ படத்துக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அப்படத்தின் கதாநாயகனாக விளம்பரப்படுத்தப்பட்டுவரும் பாபி சிம்ஹா துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பரங்கிமலை துணை போலீஸ் கமிஷனர் முத்துச்சாமியிடம் பாபி சிம்ஹா அளித்த புகாரில்,’’கடந்த 2018ம் ஆண்டு கோவையை சேர்ந்த ஜான்பால்ராஜ் இயக்கி தயாரித்த ’அக்னிதேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இதில் 5 நாள் மட்டுமே  நடித்தேன். என்னிடம் சொன்ன கதைப்படி படம் எடுக்காமல்  இஷ்டத்துக்கு காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்ததால்  நான்  நடிக்கவில்லை. நான் நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்கும்படி கேட்டேன் அதற்கும் மறுத்து விட்டார்  இப்பிரச்னையால் நான்  மீண்டும்  நடிக்கவில்லை. இது தொடர்பாக இயக்குநருக்கு  வக்கீல்  நோட்டீஸ் அனுப்பினேன். பின்னர் கோவை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது. 

 இந்நிலையில்   ’அக்னிதேவ்’ என்ற படத்தின் பெயரை மாற்றி ’அக்னிதேவி’ என்ற பெயரில் படத்தை வரும் 22ந் தேதி வெளியிட இருப்பதாகவும்  அதில் நான் நடித்தாகவும்  விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இதில் எனக்கு  பதிலாக டூப் போட்டும், கிராபிக்ஸ் செய்தும் படத்தை எடுத்து உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். 

இதுகுறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஜான்பால்ராஜ் மீது ஆள்மாற்றம்,  மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதையொட்டி இன்று வரை விளம்பரம் செய்யப்பட்டு வரும் ‘அக்னி தேவி’ படம் வெள்ளியன்று ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.