சித்தார்த் கதாநாயகனான நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி' எங்கிற படத்தில்,  ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது தேசிய விருது பெற்ற முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் இவருக்கு கை கொடுக்க வில்லை என்றாலும், தொடர்ந்து வலுவான வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.

மேலும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள 'வல்லவனுக்கு வல்லவன்' திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபி சிம்ஹா, கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடன் 'உறுமீன்' படத்தில் கதாநாயகியாக நடித்த 'ரேஷ்மி மேனனை' காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ஏற்கனவே முத்ரா என்கிற பெண் குழந்தை இருக்கும் நிலையில், ரேஷ்மி மேனன் இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.