இங்க இருக்குற எவனுக்கும் ஃபுட்பால் ஆடத்தெரியாது என்பதற்காக உங்க இஸ்டத்துக்கு கதை விடுவீங்களா? அய்யய்யோ முடியலப்பா சாமி என விஜய் நடித்த பிகில் படத்திற்கு மிக மோசமான விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூசட்டை மாறன். 

படத்தின் ரிலீசை போலவே ப்ளூசட்டை மாறனின் விமர்சனத்தையும் திரைத்துறையினர் மட்டுமல்லாது ரசிகர்களும் எதிர்நோக்கி காத்திருப்பர். காரணம், ப்ளூசட்டை மாறன் சம்பந்தப்பட்ட படத்தில் இருக்கும் நுணுக்கமான விஷயங்களையும் எளிதாக போட்டுடைத்து விடுவார். அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.  அவரது விமர்சனம் எந்த அளவுக்கு பிரபலம் என்றால், அவர் வெளியிடும் விமர்சன வீடியோக்களுக்கு விளம்பரங்கள் வந்து குவிகின்றன. 

அப்படிப்பட்ட ப்ளூசட்டை மாறன், பிகில் விமர்சன வீடியோவில் எடுத்த எடுப்பிலேயே, ’ஐட்டம்காரன் வர்றான் என ஹீரோவான தாத்தா விஜய் கேரக்டரை பங்கமாய் கலாய்க்கிறார். ஆரம்பத்திலேயே இப்படி அவர் விமர்சித்து, ஆங்காங்கே திகில் கிளப்பி உள்ளார். ப்ளூசட்டை மாறன் ஆங்காங்கே வைக்கும் கேள்விகளும், ஐயங்களும் இயல்பானதாகவே இருக்கிறது. 
 
அந்த விமர்சனத்தில், ‘புட்பால் டீமை வழிநடத்தி ஜெயிக்க பொறுப்பு விஜய்க்கு. ஹீரோ டீமை வழி நடத்தினால் ஜெயிக்காமலா விடுவாரு. அதை எதுக்கு உட்கார்ந்த்து பார்த்துகிட்டு. அதான் உட்கார்ந்து பார்த்தோமே மூணு மணி நேரம். அதர்மம் பண்ற ரவுடி வசதியா இருப்பான். இவர் தர்மம் பண்ற ரவுடியா விஜய் வருகிறார். எப்பவும் 10 பேர்களை கூட வைச்சிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்காரு. சோத்துக்கு என்ன பண்ணுவாரு. என்ன வருமானம்? என்ன தொழில்? ராத்திரில எதுவும் அண்டா கிண்ட்டா உருட்டுவாங்களா? சுவர் ஏறிக் குதிப்பாங்களா? பூட்டைகீட்டை உடைப்பாங்களா?

 

எல்லா தமிழ் சினிமாவிலும் ஹீரோ நல்ல ரவுடியாம். நல்ல ரவுடினா சோத்துக்கு என்ன செய்வீங்க..? விஜய்யோட கட்டுப்பாட்டுல இருக்கிறதா வடசென்னையை காட்டுறாங்க.. எல்லா சீன்களிலும் 500 பேர் 1000 பேர் இருக்காங்க. அந்த எல்லா சீன்களும் டி.நகர் ரங்கநாதன் தெருவுல எடுத்தது மாதிரியே இருந்தது. இதுக்குப்பேரா பிரம்மாண்டம்? 

பிரம்மாண்டம் என்பது படத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக செலவழிப்பாங்க. தத்ரூபமா காட்ட செலவழிக்கலாம். காசு இருக்குன்றதுக்காக செலவழிச்சா அதுக்கு பேரா பிரம்மாண்டம்.? சரி இவ்வளவு காசு செலவழிச்சீங்களே... பாவம் தாத்தா விஜய் ’பிகிலே’ன்னு தொண்டை கட்டிட்டு கத்துறார்ல. ஒரு 50 பைசாவுக்கு ஹால்ஸ் வாங்கிக் கொடுத்துருக்கலாம்ல. படத்துல ஹீரோவ ரவுடி என்பதற்காக அந்தப்பொண்ணுங்க வெறுக்குறாங்களாம். விளையாட்டுல ஆர்வம் இருக்குற அந்தப் பொண்ணுங்களுக்கு ஸ்டேட் லெவல் புட்பால் வீரர் தான் அவர்ங்கிறது கூடவா தெரியாது. 

சரி அப்ப தெரியலைனா கூட தெரியல. படம் முடிஞ்ச பிறகும் கூட ஹீரோ ஒரு ஃபுட்பால் ப்ளேயர்னு தெரியலையா?  கோச்சுக்கு ஒரு எல்லை இருக்கு. அந்த கோச்சே ஆட்களை தேர்வு செய்வாராம். ஃப்ளைட் டிக்கெட் போடுவாராம், அடுத்த சீன்லயே அந்தப்பொண்ணுங்க கோல் போடுவாங்களாம். ப்ளேயர்ஸ்களுக்கு பிட்னஸ் வேண்டாமா? இங்க இருக்குற எவனுக்கும் ஃபுட்பால் ஆடத்தெரியாது என்பதற்காக உங்க இஸ்டத்துக்கு கதை விடுவீங்களா? 

ஃபார்ம்ல உள்ள விளையாட்டு வீரர்களையே நிஜத்தில் வீட்டுக்கு அனுப்பி வைச்சிக்கிட்டு இருக்காய்ங்க. இதுல வீட்டுல இருக்கிற பொண்ணுங்கள கூட்டி வந்து விளையாட வைப்பாராம்..? கேட்டா எங்க ஹீரோ பெண்களை உயர்த்த போராடுறாருனு சொல்லுறாங்க. யப்பா இந்த பெண்களுக்காக போராடுறது, திருநங்கைகளுக்காக போராட்டுறது, விவசாயிகளுக்காக போராடுறது... அய்யய்யோ முடியலப்பா சாமி.

ஹீரோவுக்கு ஓபனிங் சீன் மாஸா காட்டணும்னு சொல்லி ஒரு சீன் வைச்சிருப்பாய்ங்க. ஹீரோவை கூட்டி வந்து போலீஸ் ஸ்டேசன்ல வைச்சிருப்பாய்ங்க. இங்க இருந்துக்கிட்டே முதல்வரோட கான்வாய்ல இருக்கிற சீப்பை ஹீரோ வெடிக்க வைப்பாரு. உடனே அந்த ஹீரோவை கையெடுத்து கும்பிட்டு இன்ஸ்பெக்டர் மரியாதையோட வழியனுப்பி வைப்பாரு. எப்படியாப்பட்ட கிரியேட்டிவிட்டினு பாருங்க’’ என முடித்திருக்கிறார் ப்ளூசட்டை மாறன். இதுவரை வெளியான விஜய் படங்களை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார். அதில் பல படங்களை பாராட்டி இருக்கிறார். மெச்சி இருக்கிறார். ஆனால் பிகில் படத்தை போல மட்டமான விமர்சனத்தை அவர் கொடுத்ததே இல்லை.