‘குபேரா’ படம் குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
Kuberaa Blue Sattai Maran Review
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தான் ‘குபேரா’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. படம் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் குறித்த விமர்சனங்களை கூறியுள்ளார்.
‘குபேரா’ படத்தின் கதை
படம் குறித்து அவர் கூறியதாவது, “படத்தின் ஆரம்பத்தில் முதலில் எண்ணெய் குறித்து ஆய்வு செய்யும் ரிசர்ச் சென்டர் ஒன்றை காண்பிக்கிறார்கள். அங்கு அந்த ரிசர்ச் வெற்றியடையவே அதை ஒரு சயின்டிஸ்ட் மிகப்பெரிய தொழிலதிபரிடம் சென்று கூறுகிறார். தொழிலதிபர் அன்றைக்கு இரவோடு இரவாக மத்திய மந்திரி ஒருவரை சந்தித்து அந்த எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தம் தன்னிடம் கொடுக்கும்படி கேட்கிறார். அவர் அதற்கு மந்திரி ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சமாக கேட்கிறார். 50 சதவீதம் கருப்பு பணமாகவும், 50 சதவீதம் வெள்ளை பணமாகவும் கொடுக்கும்படி மந்திரி கேட்க அதை அந்த தொழிலதிபரும் ஒப்புக் கொண்டு வருகிறார். ஆனால் இவ்வளவு பெரிய பணத்தை எப்படி பரிமாற்றம் செய்வது என்பது தெரியாமல் தொழிலதிபர் குழப்பத்தில் இருக்க அப்போது அவருக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது.
‘குபேரா’ பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ஒரு அதிகாரியை வைத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற அந்த தொழிலதிபர் திட்டம் தீட்டுகிறார். அப்போது நேர்மையாக இருந்து ஜெயிலுக்கு சென்ற சிபிஐ அதிகாரியான நாகார்ஜூனாவை அவர் விடுதலை செய்கிறார். நாகார்ஜூனாவும் தான் விடுதலை ஆகி வெளியில் வந்தால் போதும் என்கிற எண்ணத்துடன் இருக்கிறார். எனவே தொழிலதிபரின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு நாகார்ஜூனா ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். வெளியே வந்த பின்னர் இவ்வளவு பெரிய பணப்பரிமாற்றத்தை நேரடியாக செய்தால் நாம் மாட்டிக் கொள்வோம். எனவே இதை வேறு வழியில் செய்யலாம் என்று சொல்லி ஒரு நான்கு கம்பெனிகளை தொடங்கி அந்த நான்கு கம்பெனிக்கும் பிச்சைக்காரர்களை இயக்குனர்களாக நியமித்து பணப்பரிமாற்றத்தை தொடங்குகின்றனர். அந்த சமயம் பார்த்து தனுஷ் தப்பித்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.
படம் படுத்துவிட்டது - கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
இந்தப் படத்தின் ஆரம்பம் பிரமாதமாக இருந்தது. கார்பரேட் முதலாளிகளின் லைப் ஸ்டைல், அவர்கள் ஒரு பிரச்சனையை அணுகும் விதம் ஆகியவை உண்மைக்கு நெருக்கமாகவும், நம்பும் விதமாகவும் இருந்தது. ஆனால் தனுஷ் தப்பித்து ஓடிய காட்சிகளுக்குப் பின்னர் படம் நீட்டி நிமிர்த்து படுத்துவிட்டது. கதை சுத்தமாக நகரவே இல்லை. ஆனால் தனுஷ் மட்டும் நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறார். படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை. நாகார்ஜூனா நல்லவரா? கெட்டவரா? என்கிற குழப்பத்திலேயே படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹீரோ அறிவாளியா? முட்டாளா? என்பது தெரியவில்லை. ராஷ்மிகா இந்த படத்தில் எதற்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. இந்த படத்தில் இருந்த ஒரே ஒரு உருப்படியான கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் மட்டுமே. ஏனென்றால் அவர் தான் நினைத்த மாதிரி படத்தில் போய்க் கொண்டிருந்தார்.
பிச்சைக்காரர்கள் பற்றிய படம்
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரர்கள் என்றால் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நீ வேண்டுமானால் ஒருநாள் பிச்சை எடுத்துப் பாரு என்று அந்த வில்லனையும் உசுப்பேத்தி ஹீரோ பிச்சை எடுக்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தையே கேவலப்படுத்தி விட்டார். ஒரு கார்பரேட் கம்பெனியை உருவாக்கி அதன் மூலம் எவ்வாறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது, இதை ஹீரோ கண்டுபிடித்து எவ்வாறு கம்பு சுத்தப் போகிறார். படம் எப்படி நகரப் போகிறது என்ற ஆர்வத்துடன் அமர்ந்து பார்த்தால், இவர்கள் பிச்சைக்காரர்கள் பிரச்சனை என்னானு தெரியுமா என்று மூன்று மணி நேரம் எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தை மொத்தம் பத்து மணி நேரம் எடுத்து வைத்திருப்பார்கள் போல. அதை முந்தாநாள் வரை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரர்களுக்கும் ஒவ்வொரு ஃபிளாஷ்பேக் இருக்கிறது. இந்த ஃப்ளாஷ்பேக் எல்லாம் முழு நீளமாக எடுத்து வைத்திருப்பார்கள் போல.
படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள்
நாசர் எல்லாம் இரண்டு காட்சிகளில் மட்டுமே வருகிறார். அவரது காட்சிகளை எல்லாம் முழுதாக வெட்டிவிட்டார்கள் போல. இரண்டாவது பாதியில் சாயாஷி ஷிண்டே வரும் காட்சிகள் ஒரு ஐந்து நிமிடம் ஓடுகிறது. அவை நன்றாக இருந்தது. படத்தில் வில்லன் கதாபாத்திரம் மட்டுமே நல்லா இருந்தது. படத்தில் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தது. ஊரே தனுஷை தேடிக் கொண்டிருந்தபோது அவர் நடுரோட்டில் ஆடிட்டு இருக்காரு. படத்தில் வில்லன் நன்றாக நடித்திருந்தார். தனுஷ் வழக்கம் போல சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நாகார்ஜுனா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருந்தார். தனுஷிடம் ஒரு பிரச்சனை என்னவென்றால் அவர் படத்தில் நன்றாக நடித்துவிட்டு மேடை என்று வரும்போது கோட்டை விட்டுவிடுகிறார்.
தனுஷை விமர்சித்த மாறன்
என்னதான் வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து கொண்டு, பாடி லாங்குவேஜ் எல்லாம் ரஜினி போல தயார் செய்து கொண்டு, வாயை கோணலாக வைத்து பேசினாலும் நம் ஆளுக கண்டுபிடித்து கலாய்க்க ஆரம்பித்து விடுகின்றனர். தனுஷ் இன்னும் கொஞ்சம் ரஜினி போல பயிற்சி எடுத்துக் கொண்டு வர வேண்டும். ஆடியோ லஞ்சுக்கு வந்தீங்களா, படத்தை பத்தி பேசினீங்களா அதோட போங்க என்று சொல்வதற்கு நாம் தயாராக இல்லை. அதோட போயிட்டாங்கனா மீம் கிரியேட்டர்ஸ்க்கு கன்டென்ட்க்கு எங்க போறது? தனுஷை வைத்து நான்கு நாட்களாக நல்ல கன்டென்ட் மாட்டிக்கிச்சு. மொத்தத்தில் இந்த படம் படத்தின் ஆரம்பத்தில் கார்பரேட் கம்பெனி, பெரிய முதலாளிகள், பிரைவேட் ஜெட், கோடி கோடியாக பணம், ஸ்விஸ் பேங்க் என்ன வாணவேடிக்கைகளாக ஆரம்பித்து கடைசியில் குப்பை தொட்டியில் வந்து படம் முடிந்து விட்டது. அதோட இந்த படத்தின் சோலியும் முடிந்துவிட்டது” என ப்ளூ சட்டை மாறன் ‘குபேரா’ படம் பற்றி தனது விமர்சனங்களை கூறினார்.
