ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப்போவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘தர்பார்’படப்பிடிப்பு கடந்த 25 நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் முடிவடைந்து பொங்கலன்று ரிலீஸாகிறது. இதற்குப் பிறகு மீண்டும் ரஜினி, விஜய், அஜீத் என்று தமிழில் வலம் வர விரும்பாமல் ஹாலிவுட்டில் கால்பதிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளது ஒரு பிரபல நடிகரின் ட்விட்டர் பதிவால் அம்பலமாகியுள்ளது. அப்படத்தில் தெலுங்குத் திரையுலகின் டாப் ஸ்டாரும் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தவருமான மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார்.

‘கமாண்டோ’, ‘ப்ரிடேட்டர்’,பேர்ட் ஆன் வயர்’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டுக் தனது ட்விட்டர் பதிவில்,...இயக்குநர் முருகதாஸ் மற்றும் மகேஷ் பாபு அவர்களே அடுத்த முறை லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது லஞ்சுக்கு வாருங்கள். நமது சர்வதேச புராஜக்ட் பற்றிப் பேசி முடிவெடுத்துவிடலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது மகேஷ் பாபுவின் ‘மக்ரிஷி’ படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்து அனில் ரவிபுடியின் இயக்கத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள மகேஷ் பாபு முருகதாஸ் போலவே அடுத்த ஜனவரியில் ஹாலிவுட் படத்துக்குத் தயாராகிவிடுவார். தற்போது உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ்தான் வசனம் எழுதினார் என்பது தெரிந்ததே.