அட்லி,விஜய் காம்பினேஷனில் தீபாவளிக்கு வெளியாகக்கூடும் என்று நம்பப்படும் ‘பிகில்’பட ட்ரெயிலரை தியேட்டரில் வெளியிட காவல்துறை அனுமதி மறுத்துள்ள செய்தி பரபரப்பாகிவருகிறது. காவல்துறை அனுமதி மறுத்ததை பகிரங்கமாக வெளியிட்ட அத்தியேட்டர் நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில்...விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் நடத்தாத காவல்துறைக்கு நன்றி’என்று பதிவிட்டிருப்பது அவரது ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளது.

பிகில் பட ஆடியோ விழாவில் தமிழக அரசை விமர்சித்து நடிகர் விஜய் பேசியதால் இப்பட ரிலீஸுக்கு நெருக்கடி வரக்கூடும் என்கிற செய்திகள் மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றன. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு முன்பே சென்சார் சென்ற படம் இன்னும் பார்க்கப்படாமல் இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பு முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாகவும் நடிகர் விஜய் முதல்வரை சந்தித்தாலொழிய பிரச்சினை முடிவுக்கு வராது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு திரையரங்கம் ஒன்றில் சனியன்று விஜய் ரசிகர்களை பிரம்மாண்டமாகத் திரட்டி ட்ரெயிலரை வெளியிட நடத்திய முயற்சிக்கு காவல்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது தொடர்பாக  அந்த திரையரங்க ட்விட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் என்பவர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது.ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய செலவு பண்ணினோம். 10 நாட்களாக இதற்காக நிறையத் திட்டமிட்டோம். திட்டமிட்டபடி அனைத்துமே வந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. மதியம் சாப்பிடாமல் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன். ஒரு பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாக கலைந்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வந்து அமைதியாகச் சென்றுள்ளீர்கள். காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி...என்று குறிப்பிட்டுள்ளார்.