கடந்த இரு தினங்களாக வலைதளவாசிகளின் நொறுக்குத்தீனியாக மாறியிருக்கும் ‘பிகில்’படத்தை, அக்கதையின் சொந்தக்காரன் என்று உரிமை கொண்டாடி வந்த உதவி இயக்குநர் கே.பி.செல்வாவும் மிகவும் பங்கமாகக் கலாய்த்துள்ளார். முகநூலில் போடப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய பதிவு சற்று நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது.

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அதிலும் குறிப்பாக அஜீத்,விஜய் படங்கள் ரிலீஸாகும்போது வலைதள வாசிகள் ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ’என்று ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு வித்தியாசமான மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று வெளியாகியுள்ள ‘பிகில்’படம் படு சேதாரத்துக்கு ஆளாகியுள்ளது. இதையொட்டி அஜீத்,விஜய் ரசிகர்கள் படுபயங்கரமாக வலைதளங்கள் மூலம் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘பிகில்’ படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் கதைக்கு உரிமை கொண்டாடிய கே.பி.செல்வா. இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “யுவர் ஹானர், அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவர் கொத்தியது போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் கபாலம்” என நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மிகப் பிரபலமான வசனம் ஒன்றைக்குறிப்பிட்டுப் படத்துக்கு தன் பங்குக்கு பங்கம் செய்துள்ளார். அப்பதிவு பயங்கர வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து தற்போது முகநூல் பக்கத்திலிருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளது.