விஜய்,அட்லி கூட்டணியின் ‘பிகில்’திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது என்று ஆளாளுக்கு ரீல் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்திற்கு 7 பேர் மட்டுமே வந்ததால் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டதாக பரவும் செய்திகள் அப்பட வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிகில் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஏழுநாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான தேவி பாரடைஸில் போதுமான கூட்டம் இல்லாததால் பிகில் திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நேற்றைய மாலைக் காட்சி ஒன்றுக்கு 7 பேர் மட்டுமே வந்திருந்ததாகவும் பின்னர் அவர்கள்  தேவி தியேட்டருக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து திரையரங்க நிர்வாகியிடம் கேட்ட போது, தேவி சினிமாஸில் மொத்தம் 4 திரையரங்குகள் உள்ளன. அதில் 2-ல் பிகில் திரையிடப்பட்டுள்ளது. இரண்டு திரையரங்குகளுக்கான கூட்டம் வராததால் ஒன்றில் மட்டும் பிகில் திரையிடப்படுகிறது. இது பிகில் படத்துக்கு மட்டும் அல்ல மற்ற படங்களும் இப்படித் தான் திரையிடப்படுகிறது என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.அச்செய்தியை இதுவரை நடிகர் விஜய் தரப்போ தயாரிப்பாளர் தரப்போ மறுக்காததால் விஜய் படம் 200 கோடி வரை வசூலித்ததாகச் சொல்லப்படும் அத்தனை செய்திகளும் போலியானவை என்றே தெரிகின்றன.