இலவசமாக வழங்கப்பட வேண்டிய ‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சி டிக்கெட்டுகளை பட  நிறுவனம் மறைமுகமாக விலைக்கு விற்றுக்கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்களும் படக்குழுவினர் கடும் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.

விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. இந்நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்துகொள்வாரா இல்லையா என்பது தொடர்பாக ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.

எட்டாயிரம் பேர் கலந்துகொள்ளக்கூடிய இவ்விழாவில்  விஜய் ரசிகர்களுக்கென்று சுமார் மூன்றாயிரம் இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளனவாம். அதேசமயம் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லையாம். ஆளுக்கு ஒரு சீட்டு கொடுத்திருக்கிறார்கள், அதுவும் மிகவும் பின்னால் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். நாங்கள் பணியாற்றிய படத்தின் விழா என்பதால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் விழாவைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.ஆளுக்கு மூன்று  சீட்டுகளாவது கொடுங்கள் என்று கேட்டும்  தயாரிப்பு தரப்பில் மறுத்துவிட்டார்களாம்.

டிக்கெட்டில் அவ்வளவு கெடுபிடிக்குக் காரணம் அந்த அரங்கில் நடக்கும் பாடல் விழாவின் நுழைவுச் சீட்டுகளை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்களாம். விஜய்,ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வதாலும், சன் தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பாவதாலும் நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமானோர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்ட பட நிறுவனம், விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறதாம். இதனால் படத்தில் பணியாற்றியவர்களும் விஜய் ரசிகர்களும்  கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.