தளபதி விஜய், இரட்டை வேடத்தில் நடித்து கடந்த வருடம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, பெண்கள் மத்தியில் மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்ததாக, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படம் 20 கோடி நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதனால் விஜய் தன்னுடைய நிறுவனத்திற்கு மற்றொரு படம் நடித்து கொடுக்க வேண்டும் என, ஏ.ஜி.எஸ். நிறுவனம் கூறி வருவதாக ஊடகம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இதுபோன்ற தகவல்களை நான் வெளியிட வில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். இதன் மூலம் தற்போது 'பிகில்' படம் குறித்து வெளியான இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.