இன்னும் சரியாக 11 நாட்களே உள்ள நிலையில் ‘பிகில்’படம் தீபாவளிக்கு வருவதை அதன் தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யவில்லை. 5 நாள் காத்திருப்புக்குப் பின் நேற்று மாலை 3 மணிக்கு சென்சார் அதிகாரிகள் படம் பார்ப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் அது குறித்த அப்டேட்டையும் தயாரிப்பாளர் தரப்பு இதுவரை வெளியிடவில்லை.

ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் தன் பட ஆடியோ விழாவில் சில விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் ‘பிகில்’படம் சிக்கலில் மாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் எதிரொலியாக கடந்த 9ம் தேதி பிகில் படம் சென்சாருக்கு அப்ளை செய்யப்பட்ட நிலையில், 5 நாட்களாக படம் பார்க்காமல் கடத்தி வந்தனர். அந்நிலையில் நேற்று மாலை மூன்று மணிக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக வளாக திரையரங்கில் ‘பிகில்’படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து சர்டிபிகேட் வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை வரை அதுகுறித்த அப்டேட்கள் எதையும் தயாரிப்பாளர் தரப்பு மீடியாவுக்கு தெரிவிக்கவில்லை.

இது ஒரு புறமிருக்க, எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த வேளையில்,  தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கே.பி.செல்வா தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் இன்று விசாரிக்க இருக்கிறார். இந்த வழக்கு மீண்டும் உயிர்பெற்று வந்திருப்பதே அதிமுக மேல்மட்டத் தூண்டுதலின்பேரில்தான் என்று கூறப்படுகிறது.