மலைவாழ் மக்களின் எதார்த்த வாழ்க்கையை சொல்லும் படம்.. பிக் பாஸ் தர்ஷனின் "நாடு" - வென்றதா? வீழ்ந்ததா?
Naadu Movie Review : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இலங்கை வாழ் தமிழர் தான் தர்ஷன். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இன்று டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல முறையில் ஓடி வரும் திரைப்படம் தான் நாடு.
படக்குழுவின் அறிமுகம்
பிரபல இயக்குனர் எம். சரவணன் இயக்கத்தில் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் நாடு. இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன், முன்னணி நடிகை மகிமா நம்பியார், மறைந்த மூத்த தமிழ் நடிகர் ஆர். எஸ் சிவாஜி, குணச்சித்திர நடிகர் சிங்கம் புலி, அருள்தாஸ், இன்பா மற்றும் வசந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடிக்க சக்திவேல் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க, இன்று டிசம்பர் 1ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதைக்களம்
கொல்லிமலை பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் தேவ நாடு, இந்த கிராமத்தை சுற்றிலும் நடக்கும் ஒரு கதைகளத்தை கூறும் படம் தான் நாடு. தேவ நாடு ஒரு மலைக்கிராமம் என்பதால் அங்கு பெரிய அளவில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, குறிப்பாக அடிப்படை தேவையான மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமமாக தேவ நாடு திகழ்ந்து வருகிறது.
அந்த கிராமத்தில் துரு துரு இளைஞனாக வளம் வருபவர் தான் தர்ஷன், இந்நிலையில் அங்கு ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு, நாயகி மகிமா நம்பியார் மருத்துவராக அங்கே பணியமர்த்தப்படுகிறார். ஆனால் அந்த மலைவாழ் கிராமத்திற்கு வந்த வெகுசில நாட்களில் அந்த இடம் அவருக்கு பிடிக்காமல் போக, அங்கிருந்து எப்படியாவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கி சென்று விட வேண்டும் என்கின்ற எண்ணம் அவருக்குள் எழுகிறது.
இதற்கிடையில் மருத்துவராக அந்த கிராமத்திற்கு சென்று அவர் சிலருடைய உயிரை காப்பாற்ற, அந்த மக்களுக்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை எழுகிறது. மகிமா நம்பியாருக்கு உதவும் உதவியாளராக தர்ஷன் பணியமர்த்தப்படுகிறார். மேலும் தங்கள் ஊருக்கு வந்த மருத்துவர் அவ்விடத்தை விட்டு செல்லவிருக்கிறார் என்பதை அறிந்து, அவர் அந்த ஊரில் இருந்து செல்லாமல் தடுக்க மலைவாழ் மக்கள் பல முயற்சிகளை மேற்கொள்ளுகின்றனர்.
இறுதியாக மலைவாழ் மக்கள் ஜெயித்தார்களா? அல்லது மகிமா நம்பியார் அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கி சென்றாரா? என்பதை சுவாரசியமான திருப்பங்களோடு கூறியுள்ள திரைப்படம் தான் நாடு.
விமர்சனம்
நடிகர் தர்ஷன் கிராமத்து இளைஞனாக நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றே கூறலாம். அவருடைய நேர்த்தியான நடிப்பு பல இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கின்றது. மூத்த நடிகர்கள் சிங்கம் புலி மற்றும் ஆர். எஸ் சிவாஜி ஆகிய இருவருக்கும் இடையே வரும் காட்சிகள் அரங்கில் சில விசில் சத்தங்களை எழுப்புகிறது என்றே கூறலாம்.
மருத்துவராக வரும் மகிமா நம்பியாரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்துள்ளார். அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல விஷயங்கள் படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்துள்ளது. சில இடங்களில் திரைக்கதையில் தொய்வுகள் இருந்தாலும் 5க்கு 3.5 மதிப்பெண் பெறுகின்றது நாடு திரைப்படம்.
Annapoorani Review: செஃபாக நயன்தாரா சோபித்தாரா? சோதித்தாரா.. 'அன்னபூரணி' படத்தின் விமர்சனம் இதோ.!