திருமணம் ஆகி 4 வருடங்களுக்கு பிறகு,  பிக்பாஸ் புகழ் சென்ராயனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், இந்த மகிழ்ச்சியை குடும்பமே கோலாகலமாக கொண்டாடி வருகிறது. மேலும் இந்த செய்தி பற்றி அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், சென்ராயனுக்கும், அவருடைய மனைவி கயல்விழிக்கும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சென்ராயன். நடிகர் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தின் மூலம்,  தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை கொடுத்தது 'மூடர்கூடம்' படம்தான்.  மேலும் ஜீவா நடித்த 'ரௌத்திரம்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

தமிழில் பட வாய்ப்புகள் குறைவாக கிடைத்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேடி வந்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். இவரின் வெகுளித்தனமான பேச்சு,  எதார்த்தமான நடவடிக்கைகள்,  கள்ளம் கபடம் இல்லாத மனது, ரசிகர்களை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. பலர் இவருக்கு தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் பலர் எதிர்ப்பார்த்த நிலையில், திடீர் என ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சென்ராயன்.  

இந்நிலையில் கமலாஹாசனிடம் பேசும் போது "திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை என சொல்லி வேதனைப்பட்டார்".  மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக கூறினார்.

இவரின் நல்ல மனதுக்கு, பரிசு கிடைத்தது போல்...  இவருடைய மனைவி கயல்விழி,  சென்றாயன் பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்ற பிறகு தான், நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததாகக் கூறி ஒரு பேட்டியில் கூறினார்.  இந்த தகவலை பிக்பாஸ் வீட்டில் உள்ளே சென்று சென்ராயனிடம் கூறி  அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த தகவல் அறிந்ததும் நடிகர் சென்ராயன் நான் அப்பாவாங்கிட்டேன் என, தலைகால் புரியாமல் துள்ளி குதித்து கத்தி,  தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இவரின் செய்கை பார்ப்பவர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியது.

தற்போது இவருடைய, மனைவி கயல் விழிக்கு ஓரிரு தினங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து முதல் முறையாக இவர் பேசுகையில், "என்னுடைய மகன் மிகவும் அதிர்ஷ்டக்காரன். நான் பிறக்கும் போது என் ஊரில் உள்ள சிலருக்கு மட்டும் தான் என் பிறப்பு பற்றி தெரியும். ஆனால் என் மகன் பிறந்தது பல ஊர்களில் உள்ளவர்களுக்கு தெறித்து விட்டது. லட்ச கணக்கானோர் வாழ்த்தி வருகிறார்கள் என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.