சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில், ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டதும்,  ரசிக்கப்பட்டதும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே கூறலாம்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களின் உண்மையான குணாதிசயத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.

100 நாட்கள் 16 பிரபலங்கள் ஒரே வீட்டிற்குள், எந்த வித வெளியுலக தொடர்பும் இன்றி இருக்க வேண்டும். காலை, இரவு என்பதை தவிர மற்ற நேரம் பற்றி எதுவும் அவர்களுக்கு தெரியாது. அவர்களுடைய அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களுடைய உண்மையான குணம் போன்றவற்றை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பொறுத்து, இவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும், உள்ளே இருப்பதும் மக்கள் போடும் வாக்குகளை வைத்தே நிர்ணயிக்கப்படும்.

ஏற்கனவே இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் சீசன் நிறைய ரசிகர்களால் ரசிக்கப்பட்டது, ஆனால்  இரண்டாவது சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் மூன்றாவது சீசனை மிகவும் வித்தியாசமாகவும், ரசிகர்களை கவரும் விதத்திலும் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அதே போல் போட்டியாளர்களின் தேர்வும் நடந்து வருகிறது.  

ஏற்கனவே வெளியான இரண்டு சீசன்களில் நடிகர் கமலஹாசன் தொகுப்பாளராக இருந்த நிலையில், மூன்றாவது சீசனிலும் இவரே தொடர்வார் என கூறப்படுகிறது.  அரசியல் ஒரு பக்கம், இந்தியன்-2 ,மறுபக்கம் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பிலும் விரைவில் பிஸியாக மாறுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின், ப்ரோமோ பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் மூன்றாவது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.