பிக்பாஸ் சீஸன் 3’இன்றைய 12வது நாள் நிலவரப்படி இல்லத்தில் உள்ள 16 போட்டியாளர்களில் யார் யாரைக் காதலிக்கிறார்கள், ரூட்டு விடுகிறார்கள் ,நூல் விடுகிறார்கள் என்று சரியாய் கண்டுபிடுத்துச் சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கலாம் என்கிற அளவுக்கு ஆளுக்கு ஆள் குழப்பிக் கும்மியடிக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் 3வது சீசனில், முதல் இரண்டு சீசனில் இல்லாத அளவுக்கு காதல் கச்சேரிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சீசன் தொடங்கிய போதே, கவின் மீதான தனது காதலை, சக போட்டியாளர்களிடம் வெளிப்படுத்திய அபிராமி, கவினிடமும் அதை தெரிவித்தார்.உலகிலேயே மிக புத்திசாலியாக, அனுபவசாலியாக தன்னை கற்பனை செய்து கொண்டு வீட்டில் உலாவி வரும் கவின், அபியின் காதல் ஆசையை, அபியையும் குழப்பி, நம்மையும் குழப்பி என்னமோ செய்து தவிர்த்தார். தொடர்ந்து தவிர்த்தும் வருகிறார். இதற்கிடையில், லோஸ்லியாவை ஒன்சைடாக டாவு விட்டுக் கொண்டிருக்கிறார். 

இதுவரை ஆண் நேயர்களின் கனவுக்கன்னியாக உலா வரும் லோஸ்லியா, கவினின் அந்த வெளிப்பாட்டை வெட்கத்துடன் ஏற்றுக் கொள்கிறார். அதேசமயம், அபிராமியின் உயிர்த் தோழியாய்(இதுவரை) சுற்றிக் கொண்டிருக்கும் சாக்ஷியையும் தனிமையில் தள்ளிக் கொண்டு பேசுகிறார், பேசுகிறார், பேசிக் கொண்டே இருக்கிறார் கவின். சாக்ஷியும் கவினை ஒன் சைடாக விரும்புவது நமக்கு தெரிகிறதோ இல்லையோ, கவினுக்கு நன்றாகவே தெரிகிறது. இதற்கிடையில், என்னங்கடி நா ரூட்டு விட்டா, இத்தனை பேரு அவனை ரூட்டு விடுறீங்க-னு அபி ஏகத்துக்கும் டென்ஷனாக, அதை அப்படியே படம் பிடித்து எடிட் செய்து புரமோவாக வெளியிட்டுள்ளது பிக்பாஸ் டீம். அதில், சாக்ஷி அழுந்து கொண்டு நிற்க, வனிதாவும், ஷெரினும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, இல்லாத இடுப்பை ஆட்டிக் கொண்டே கோபமாக கிராஸ் செய்கிறார் அபி. 

ஒரு படத்தில் விவேக் டிவி சீரியல்களில் காண்பிக்கப்படும் கள்ளக்காதல்கள் குறித்து சொல்லும்போது, ராமசாமியை லவ் பண்ணுன சிவகாமி, ரங்கசாமிக்கு ரூட் விட்டுட்டு ரங்கசாமியை சின்னவீடோட ஒண்ணுவிட்ட தங்கச்சியோட சித்தியையும் ரெண்டாந்தாரமா வச்சிருந்த அதே நேரத்துல சித்தியோட மச்சினிக்கு ரூட் விடுறப்ப மச்சினியோட தங்கச்சியோட ஃப்ரண்ட் ஒருத்தியோட...என்று பைத்தியம் பிடிக்கவைப்பார் அதுதான் இப்போது பிக்பாஸ் காதல் சமாச்சாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.