பிக்பாஸின் க்ளைமேக்ஸுக்கு முந்தைய ரீலில் தனது மகள் ஸ்ருதிஹாசனை இல்லத்துக்குள் அனுப்பிய கமல் நிகழ்ச்சியிலிருந்து லாஸ்லியாவை வெளியே அழைத்து வரச் செய்தார். தற்போது இல்லத்துக்குள் சாண்டி, முகேன் ஆகிய  இருவர் மட்டுமே உள்ள நிலையில் வின்னர் யார் என்ற குழப்பத்தில் பார்வையாளர்கள் நகத்தைக் கடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்று  மாலை 6 மணிக்குத் துவங்கிய பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களைகட்டி வருகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கஸ்தூரி யானைக் குட்டி போல் ஆடி அசைந்து ஒரு ஆட்டம் போட, அடுத்து வந்த யாஷிகா ஆனந்த் ஒரு குத்தாட்டம் போட்டார். அடுத்து வயலின் கலைஞர் ராஜேஷ் வைத்யா கமல் நடித்த இளையராஜா படப்பாடல்களை வாசித்து இசை ஜாலம் நிகழ்த்தியதோடு கமலையும் நினவோ ஒரு பறவைப் பாடலைப் பாடவைத்தார்.

அடுத்து மேடைக்கு வந்து கமலைச் சந்தித்த ஸ்ருதிஹாசன் தனக்குக் கொடுக்கப்படவிருந்த பணியை விருப்பமில்லாமல் செய்வது போல் இல்லத்துக்குள் சென்று சிறிது நேரம் அந்த மூவருடனும் உரையாடிவிட்டு அனைவரும் முன்கூட்டியே யூகித்ததுபோல் லாஸ்ல்யாவைக் கையைப் பிடித்து இழுத்து வந்தார். வின்னர் யார் என்று தெரிய இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே விழ வேண்டிய நிலையில் ஒரு த்ரில் பட க்ளைமேக்ஸை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீஸன் 3.