’முத்தம் போதாதே சத்தம் போடாதே’ என்று மொத்த பிக்பாஸ் அரங்கையும் அதிர வைத்து கடந்த வார எலிமினேஷனில் வெளியேறிய இசைக்கலைஞர் மோகன் வைத்யா தான் அத்தனை பெண்களுக்கும் தேடித்தேடிப்போய் முத்தம் கொடுத்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல இசைக்கலைஞரும் பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவருமான மோகன் வைத்யா இல்லத்தில் இருந்த அத்தனை பெண்மணிகளுக்கும் வஞ்சகமில்லாமல், எதாவது ஒரு காரணம் கொண்டு முத்தம் கொடுத்தபடியே இருந்தார். முத்தம் கொடுத்ததற்கு யாராவது கோபித்துக்கொண்டால்  அதற்கு சமாதானப்படுத்துவதற்கு இன்னொரு முத்தம் என்கிற அளவில் அவரது அட்ராசிட்டி தொடர்ந்துகொண்டு இருந்தது. இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் முத்த மன்னன் கமலே வயிற்றெரிச்சல் படும் அளவுக்கு இருந்தது இவரது முத்த நடவடிக்கை.

இந்நிலையில் கடந்த வார எலிமினேஷனில் வெளியே வந்த அவர், தான் அத்தனை பேருக்கும் வளைத்து வளைத்து முத்தம் கொடுத்ததற்கான அர்த்தம் ஒன்றைப் பேட்டியாக வழங்கியுள்ளார். அதில்,’‘எனக்கு வெறும் மூன்று சகோதர்கள் மட்டுமே உள்ளனர். சகோதரிகள்  இல்லை என்ற  வருத்தம் எப்போதும் உண்டு. அதனால்  பொதுவாகவே பெண்கள் மீது அதிக அன்பைக் காட்டுவேன். அதனால் தான் நான் முத்தம் கொடுப்பதை நான் பழக்கமாக வைத்துள்ளேன்.அங்கு இருக்கும் அனைத்து பெண்களையும் நான் மகள்களாகவே பார்க்கிறேன். அது தவிர வேறு எந்த தவறான எண்ணமும் எனக்கு இல்லை. நான் 46 வருடங்கள் இசை துறையில் இருக்கிறேன். பல பெண்களுக்குப் பாடல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உண்மையில் நான் மோசமானவனாக இருந்தால் என் பெயர் எப்போதோ கெட்டுப் போயிருக்கும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை’என்கிறார் மோகன் வைத்யா.