ஒருவருக்கும் புரிந்துவிடாதபடி மிகக் குழப்பமாக பதில் அளிப்பதில் பிக்பாஸ் கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டார் லாஸ்லியா. அவர் கவினைக் காதலிப்பது, சேரனை அப்பாவாக நினைப்பது எல்லாமே டிராமாதான்.டைட்டிலை வெல்லுவதற்காகவே இவ்வளவு நாடகங்களையும் நடத்துகிறார் என்றும் மக்கள் மத்தியிலிருந்து கமெண்டுகள் வர ஆரம்பித்துள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 70 நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் சேரன், லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன், முகென், வனிதா, ஷெரின் ஆகிய 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படமாட்டார் என்று கமல்ஹாசன் கடந்த வாரமே அறிவித்திருந்தார். ஆனால் இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது.

இதுஒருபுறமிருக்க, ஒவ்வொரு வாரமும் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களின் பிரதிநிதியாக ஒருவர் லாஸ்லியாவிடம், ”சேரன் உங்கள் மீது வைத்திருப்பது உண்மையான பாசம். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசம் நாடகம் என்று கவின் சொன்னபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.இந்த கேள்விக்கு லாஸ்லியாவை விட கவின் மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, “எனக்கு எது உண்மை, எது பொய் என்பதில் குழப்பம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். அதை நான் யாருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்று கண்ணீருடன் திணறியபடி பதிலளித்துள்ளார்.லாஸ்லியாவை, அவரது டிராமாவை அப்பட்டமாக வெளிக்காட்டும் இந்த சம்பவம் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதை புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

துவக்கம் முதலே சேரன் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் லாஸ்லியா, கவினைக் காதலிப்பது கூட ஒரு அப்பாவிப் பெண் இமேஜை சம்பாதித்து டைட்டில் வின் பண்ணுவதற்குத்தான் என்று மக்கள் பரவலாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.