பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கூத்தடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நடன இயக்குநர் சாண்டி தனது மனைவி மகள் மற்றும் கொழுந்தியாளுடன் கமலை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 கடந்த ஞாயிறன்று முடிவுக்கு வந்தது. சரியாக 105வது நாளன்று முடிவுக்கு வந்த அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான சமயங்களில் தனது கலகலப்பான பேச்சாலும் வித்தியாசமான சேட்டைகளாலும் மக்கள் மனங்களை வென்ற சாண்டி இரண்டாவது பரிசை வென்றார். முதலிடம் கிடைக்காததற்காக எவ்வித ஏமாற்றத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அப்போதும் அவர் உற்சாகமாகவே இருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலரும், பலவிதமாக தங்களது பிக் பாஸ் பயணத்தை கொண்டாடி வருகின்றனர். தனது சகபோட்டியாளர் தர்ஷனை அழைத்துக்கொண்டு நடிகர் சிம்புவைச் சந்தித்த சாண்டி அவரைக்கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார். அடுத்து சாண்டியின் நடன மையத்துக்கு வந்த லாஸ்லியா அவரது குழுவினருடன் குத்தாட்டம் ஆடி தனது குஷியை வெளிப்படுத்தினார்.இதே போன்று, ஷெரின், சாக்‌ஷி ஆகியோர் சேரன் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர். கவின், தர்ஷன் ஆகியோர் சாண்டி வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளனர். 

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சாண்டி தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோருடன் சென்று கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது அடுத்தடுத்த படங்களில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கும் கமல் விரைவில் சாண்டிக்கும் தனது படத்தில் நடன இயக்குநர் வாய்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.