விஜய் டி.வி.யின் பரபரப்பான ‘பிக் பாஸ்’ சீஸன் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் அதில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்ள நடிகை லைலாவை தொலைக்காட்சி தரப்பு அணுகிவருவதாக செய்திகள் நடமாடுகின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா, ஆரவ், ரைஸா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி மூலம் பெரும் கவனம் பெற்றனர். இரண்டாவது சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் சீசனுக்கு இருந்த வரவேற்பு ஒப்பீட்டளவில் இரண்டாவது சீசனுக்கு இல்லை என்றாலும் அதுவும் வெற்றிகரமான நிகழ்ச்சியாகவே நிறைவுற்றது . ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ஆரம்பக்கட்டப்பணிகள் துவங்கியுள்ளன.

துவக்கத்தில் கமலுக்குப் பதில் இந்நிகழ்ச்சியை நடிகை நயன்தாரா நடத்தப்போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு கமலே நடத்துகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்றாவது சீஸனில் கலந்துகொள்ளவிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் குறித்த சில யூகங்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்துவரும் மகேந்திரன், ’காலா’, ’விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சாக்‌ஷி அகர்வால், ’ராஜா ரங்குஸ்கி’, ’வில் அம்பு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த சாந்தினி தமிழரசன், ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஓவியாவின் இடத்தில் கன்னகுழியழகி லைலாவை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த சீஸனில் பெரும்பஞ்சாயத்தைக் கிளப்பி நிகழ்ச்சியை பரபரப்பாக்கி வைத்த தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யாவும் மீண்டும் அழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்.