விஜய் டி.வி.யின் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கவின். அதே தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற கவினுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தத் தொடங்கியது. எப்படியும் கவின் தான் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்த்த நேரத்தில், நிகழ்ச்சியை விட்டு வெளியேறி ரசிகர்கள் இதயத்தில் இடியை இறக்கினார். 

ஏற்கெனவே ”நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் கவின் ஒரு ரவுண்ட் வருவார் என அவர் ஆர்மி காத்திருக்கிறது. ட்விட்டரில் கவின் - லாஸ்லியா பற்றிய அப்டேட்டிற்காக காத்திருக்கும் கவின் ஆர்மிக்கு உற்சாகமூட்டும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன், கவின் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்.கே. 18 படத்தில் கவின் நடிக்க உள்ளதாகவும், மேலும் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள மற்றொரு படத்தில் கவின் ஹீரோவாக களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டி.வி.யில் தொகுப்பாளராக இருந்து திரைத்துறையில் விஸ்வரூபம் எடுத்தவர் சிவகார்த்திகேயன். ஏற்கெனவே விஜய் டி.வி. தொகுப்பாளரான ரியோவை வைத்து படம் தயாரித்துள்ளார். எனவே இந்த முறை கவினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.