பவதாரிணியின் நினைவு நாள் - இளையராஜா வேதனை பதிவு!
பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இளையராஜா போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு (ஜனவரி 25)-ஆம் தேதி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். பவதாரிணி இறப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு தான் வயிற்றில் இவருக்கு புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் கைவிரித்து நிலையில், ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இலங்கை சென்றனர். அங்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையால் பவதாரிணியின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து சென்னையில் இருந்து, இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே உள்ள பண்ணையபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் உடல், இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணையில், அவரின் அம்மா சமாதி பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. மகள் இறப்புக்கு பின்னர் அடிக்கடி இளையராஜா அவரின் சமாதிக்கு சென்று வருவதோடு, ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், இதுவரை பவதாரிணியின் மறைவில் இருந்து, அவரின் குடும்பத்தினர் யாருமே வெளியே வரவில்லை. வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் அடிக்கடி பாவதாரிணியின் நினைவுகளை பகிர்ந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!
இந்நிலையில் பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இளையராஜா மிகவும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "என் அருமை மகள் பவதா, எங்களை விட்டு நீ பிரிந்த நாள். என் அருமை மகள், பிரிந்த பின்னால்தான் அந்த குழந்தை எவ்வளவு அன்புமயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என்னுடைய கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால், என் குழந்தைகளை நான் கவனிக்காமல் விட்டு விட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை எல்லாம் ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் எனக்கும் ஆறுதலாக இருக்கிறது. பவதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்று அவரின் திதியும் வர உள்ளது. இதை இரண்டையும் ஒரு நினைவு நாள் நிகழ்வாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இதில் அணைத்து இசை கலைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என இளையராஜா கூறி உள்ளார். மேலும் மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் இந்த வீடியோவில் பேசி உள்ளார்.