Asianet News TamilAsianet News Tamil

‘இதை உங்களால் தடுக்கவே முடியாது’... அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு பாரதிராஜா எச்சரிக்கை...!

எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என பாரதிராஜா கண்டித்துள்ளார்.

Bharathiraja warns amazon prime for family man 2 web series
Author
Chennai, First Published Jun 7, 2021, 1:15 PM IST

தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாக ‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸுக்கு  தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த ஜூன் 04, 2021 அன்று உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், 'தி பேமிலி மேன் 2' தொடர் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Bharathiraja warns amazon prime for family man 2 web series

அதில், எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2  இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட  அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு  அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.  தமிழீழப் போராளிகளின் விடுதலை  போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத ,தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

Bharathiraja warns amazon prime for family man 2 web series

அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட  வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது
 மிகுந்த வன்மத்தோடும்  தொடரை உருவாக்கியிருப்பதை  வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ் ,  முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு  தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

Bharathiraja warns amazon prime for family man 2 web series

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்.
 எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன் என பாரதிராஜா கண்டித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios