Asianet News TamilAsianet News Tamil

’என் 50 ஆண்டுகால சினிமா வாழ்வில் இப்படி ஒரு படம் பார்த்ததில்லை’ - பிரமிக்கும் பாரதிராஜா...

தற்போதைய சூழலில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வருகை ரொம்பவே அதிகமாகி இருக்கிறது சமீபத்தில் வெளியான படங்களில் வெற்றிமாறன் படங்கள், ராமின் பேரன்பு, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை இந்த படங்களை எல்லாம் பார்த்து நான் ரொம்பவே விமர்சித்துள்ளேன் பாராட்டியுள்ளேன். உண்மையிலேயே நான் வியந்து போய் விட்டேன்.
 

bharathiraja praises to let movie
Author
Chennai, First Published Feb 25, 2019, 11:09 AM IST

கடந்த வியாழனன்று ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டு லெட்’ படம் வெளியானது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 32 சர்வதேச விருதுகளை பெற்ற பெருமையுடன் இந்தப்படம் திரைக்கு வந்துள்ளது... ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகை சேர்ந்தவர்களும் இந்தப்படத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே இந்தப்படம் அசைத்து பார்த்துவிட்டது என்பது இந்தப்படம் குறித்து அவர் கூறியிருப்பதிலேயே தெரிகிறது.bharathiraja praises to let movie

“எனது கடந்த 50 ஆண்டு கால சினிமா வரலாற்றில் எழுபதுகளில் வந்த படங்களின் மீது எனக்கு கோபம் உண்டு.. அப்போது பெங்காலி, மராத்தி, மலையாள படங்களை பார்க்கும்போதெல்லாம் தமிழில் இப்படி ஒரு உலகத்தரம் வாய்ந்த படங்கள் வரவிலையே என்கிற கோபம் இருந்தது. அதற்குப்பின் பாலசந்தர்  நல்ல படங்கள் பண்ணினார்.. என் காலகட்டத்தில் அதையே கொஞ்சம் கமர்ஷியலாக பண்ணினோம்.. ஒரு காலகட்டத்தில் நான், பாலுமகேந்திரா போன்றவர்கள் இருந்தாலும்,. அப்போது கூட ஒரு சத்யஜித்ரே மிருனாள் சென் அவர்கள் அளவுக்கு தமிழில் யாரும் இல்லையே என்றுதான் சொன்னார்கள்.

ஆனால் தற்போதைய சூழலில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வருகை ரொம்பவே அதிகமாகி இருக்கிறது சமீபத்தில் வெளியான படங்களில் வெற்றிமாறன் படங்கள், ராமின் பேரன்பு, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை இந்த படங்களை எல்லாம் பார்த்து நான் ரொம்பவே விமர்சித்துள்ளேன் பாராட்டியுள்ளேன். உண்மையிலேயே நான் வியந்து போய் விட்டேன்.bharathiraja praises to let movie

ஆனால் அந்த அளவுகோல்களை எல்லாம் தாண்டி என்னை கவர்ந்த படம்தான் ‘டு லெட்’. செழியன் என்னுடைய நண்பன் தான்.. ஆனால் நான் பார்த்த செழியன் வேறு. இந்த டு லெட் படத்தில் பார்க்கின்ற செழியன் வேறு.. செழியன் நல்ல ஒளிப்பதிவாளர்.. நல்ல எழுத்தாளனும் கூட. சில படங்களை, அதன் கேரக்டர்களை ரசித்திருப்போம். ஆனால் அந்த கதாபாத்திரங்களுடனேயே வாழ்வது என்பது அரிதான விஷயம். இயக்குநர் செழியன் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார். அதில் நடித்த அனைவரையும் வாழ வைத்திருக்கிறார்.. படம் பார்த்த நம்மையும் அவர்களுடன் சேர்ந்து வாழ வைத்திருக்கிறார்.

ஒரு படம் பார்த்தால் சினிமா பார்த்த உணர்வு ஏற்பட வேண்டும்.. இந்த படத்தை பார்க்கும்போது அந்த உணர்வு எனக்கு தோணவில்லை.. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அவர்களுடனேயே சுற்றி அவர்களுடனேயே அழுது விட்டு வந்தது போலிருந்தது.bharathiraja praises to let movie

ஒருவேளை அவருடைய வாழ்க்கையில் இதெல்லாம் நடந்திருக்குமோ என்னும் அளவிற்கு இவ்வளவு எதார்த்தமாக இந்த கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் செழியன். நான் கூட மண்வாசனை போன்ற படங்களில் என் மண்ணின் மைந்தர்களை பற்றி சொல்லி இருந்தாலும் இன்னும் கூட கிராமங்களை பற்றி சரியாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால்  சென்னை போன்ற நகரத்தில், ஐடி கம்பெனியினரின்  பெருக்கத்தை தொடர்ந்து, வாடகைக்கு  குடியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகளை இவ்வளவு நெருக்கத்தில் சமீபகாலமாக இவ்வளவு துல்லியமாக யாருமே சொன்னது இல்லை. இது இங்குமட்டுமல்ல, உலகத்தில் எல்லோருக்கும் உள்ள பிரச்சனை.bharathiraja praises to let movie

படத்தில் மொத்தமே பத்து கேரக்டர்கள் தான்.. அதில் ஒரு கணவன், மனைவி, குழந்தை இவர்கள் மூவரும் மொத்த படத்தையும் தூக்கி கொண்டு செல்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை.

இதில் ஹீரோவாக நடித்துள்ள சந்தோஷ் நம்பிராஜன் பெரிய எழுத்தாளர் விக்கிரமாதித்தனின் மகன்.. தந்தை மிகப் பெரிய எழுத்தாளர் என்றால் அவரது மகன் மிகப்பெரிய நடிகர் என்பதை நிரூபித்து விட்டார்.. ஒரு இடத்திலாவது அவர் நடிக்கிறாரா என்று பார்த்தேன்.. ஆனால் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்.. 

அதே போல எத்தனையோ நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறேன்.. நடிகைகளுடன் நடித்தும் இருக்கிறேன்.. ஆனால் இந்தப்படத்தில் நடித்துள்ள ஷீலா ராஜ்குமார் வறுமையில் கூட, ஆங்காங்கே எதிர்ப்படும் சின்ன சந்தோஷங்களை கூட இயல்பாக பகிர்ந்திருக்கிறார். அந்தப்பெண் சிரித்தால் நமக்கும் சிரிப்பு வருகிறது.. அவள் கோபித்தால் நமக்கு கோபம் வருகிறது.. அவள் அழுதால் நமக்கும் அழுகை வருகிறது.bharathiraja praises to let movie

பொதுவாக சிறு குழந்தைகள் நடிப்பதை பார்க்கும்போது எனக்கு ஒரு கோபம் வந்துவிடும். அவர்களை மிகைப்படுத்தி நடிக்க வைத்து விடுவார்கள் என்பதால் தான். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள சிறுவன் தருண்பாலா  நடிக்கவில்லை.. சுவற்றில் கிருக்குவதில் இருந்து, பெற்றோருடன் பாசத்தில் இழைவது வரை அவனாகவே வாழ்ந்து இருக்கிறான். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேதோ படங்களை பார்த்து இருக்கிறேன்.. ஆனால் இந்த 50 வருட காலகட்டத்தில் இந்த படம் கொடுத்த சுமை, அழுத்தத்தை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை. நான் என்ன உணர்ந்தேனோ அதைத்தான் சொல்கிறேனே தவிர, இதில் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை.


இப்படி ஒரு வாழ்க்கையை நான் சொல்ல முடியவில்லையே என்கிற கோபம் என்மேல் எனக்கே உண்டு... பின்னணி இசையையே பயன்படுத்தாமல் சுற்றுப்புற சத்தங்களை வைத்தே ஒருத்தர் படத்தை எடுத்து ஜெயித்திருக்கிறார் என்றால், ஹேட்ஸ் ஆப்.. இந்த படத்தின் விளம்பரங்களில் விருது பட்டியல் திரை முழுக்க நிறைக்கப்பட்டிருக்கிறது உலக நாடுகள் அனைத்தும் இந்த படத்தை அங்கீகரித்து இருக்கின்றன.. மிகப்பெரிய பெயருடன் இந்த படம் வந்திருக்கிறது.. இதை பார்க்கும்போது இது ஏதோ மிகைப்படுத்தப்பட்டு இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே  இந்த படம் அதற்கு தகுதியான படம்தான்.
 

 உலகத்தரம் வாய்ந்த படம் என தொடர்ந்து நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால் இன்றுவரை உலகத்தரம் வாய்ந்த படம் என்றால் எனக்குத் தெரிந்தவரை இந்த ‘டு லெட்’  படத்தை தான் சொல்வேன் மிக அற்புதமாக உலகத்தரத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் செழியன். 

இந்தப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் தங்களது ரசனையை மாற்றிக்கொள்ளவேண்டும்.. சினிமா என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. நம் தமிழ் ரசிகர்கள் உலகம் பூராவும் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு படமாக இந்த ‘டு லெட்’ வந்திருக்கிறது என்று தைரியமாகச் சொல்லுங்கள்.. இதைப் போன்ற படங்கள் அதிகமாக வருமானால், தமிழன் உலகம் முழுவதும் தலை நிமிர்ந்து நிற்கலாம்” என மனம் நெகிழ்ந்து இந்தப்படத்தை பாராட்டியுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

Follow Us:
Download App:
  • android
  • ios