ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் சிம்மானத்தில் அமர்த்தியவர்களில் இயக்குநர் பாரதிராஜாவும் ஒருவருர். தனது தமிழ் தேசிய கருத்துக்களில் உறுதியாக இருந்து வரும் பாரதிராஜா, தமிழகத்தை ரஜினி ஆள அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாரதிராஜா, ரஜினி என்னுடைய நண்பர். எளிமையான மனிதர். ஆனால் அவர் தமிழ்நாட்டை ஆள நினைப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப் போல, மராட்டியத்தை ஒரு மராட்டியர் ஆட்சி செய்வது போல, கர்நாடகாவை கர்நாடகக்காரர் தான் முதலமைச்சர் ஆக முடியும் என்பது போல், கேரளாவை கேரளாக்காரர்கள் ஆள்வது போல் ஏன் எங்களுக்கும் மண்ணின் மைந்தன் சி.எம். ஆகக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

தவறான முன் உதாராணங்களை வைத்துக்கொண்டு அவங்க ஆளலையா முன்னாடி, இவங்க ஆளலையா முன்னாடி என கேள்வி கேட்க கூடாது. ஏதோ தூங்கி தொலைச்சிட்டான் தமிழன், இப்போது தான் முழிச்சி பார்க்குறான். முன்பு வெள்ளைக்காரன் ஆட்சி நடந்தது, இங்கே ஒரு வெள்ளையர் முதல்வராக இருந்தால் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? வேண்டாம் என்று தானே விரட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

படையெடுத்து வந்தவர்கள் தமிழகத்தில் செட்டில் ஆனதால் அவர்களை தமிழர்கள் என்று அழைக்க முடியுமா? என்று சூசகமாக கேள்வி எழுப்பிய பாராதிராஜா. பிறப்பால் தமிழகத்தில் பிறந்த தமிழன் தான் எங்களது மண்ணை ஆள வேண்டும் என்று ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார்.  ஏற்கனவே சீமான் ஒருபுறம் ரஜினியின் பூர்வீகத்தை மேடைகளில் கிழிகிழியென கிழித்துக்கொண்டிருக்கும் போது, ரஜினியின் நண்பரான பாராதிராஜாவும் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.