தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென நாளை கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அதற்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், "மொழி வேறுபாடு இல்லாமல், இன வேறுபாடு இல்லாமல், பொதுக் கலைஞனுக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். நாளை மாலை 6 மணிக்கு ஒரு நிமிடம் மௌன பிரார்த்தனை, உடன் அவர் பாடிய பாடலை ஒலிபரப்பவும். அந்த பாடலில் அவர் எழுந்து வருவார். மறுபடியும் அவரது குரல் ஒலிக்கும். இந்தியாவில் மட்டுலல்ல, உலகம் முழுவதும் பல்லாயிரக்கனான பாடல்களை அவர் பாடுவார். நம் எதிர்கால சந்ததியும் அதை கேட்டு மகிழும். தயவு செய்து அனைவரும் இதை கடைபிடியுங்கள். நாளை மாலை 6 மணிக்கு" என கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களே நாளை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி.க்காக நடைபெற உள்ள கூட்டு பிரார்த்தனையில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு பிரார்த்திக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

எஸ்.பி.பி.சார் இனம், மொழி, மதம் இவை அனைத்தையும் கடந்து நமக்குள்ள நல்ல நண்பர் இருக்கிறார் என்றால் அது அவர் தான். உலகத்தில் இருக்கும் பாதி பேர் வீட்டிற்கு தனது ஒரு பாடல் மூலமாக வந்து ஹாய் சொல்லிவிட்டு செல்வார். அவர் இப்போது பாட முடியாமல், வாய் திறக்க முடியாமல், மெளனமாக உறங்கிக்கொண்டிருக்கிறார். அவரை தட்டி எழுப்பி மீண்டும் பழைய வீரத்துடன் பழைய பாவனை உடன் பாட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். அதற்கு ஒரு கூட்டு பிரார்த்தனை செய்வோமோ?... நாளை மாலை 6 மணிக்கு அவர் பாடிய ஒரு பாடலை ஒளிக்க விட்டு மனமார பிரார்த்திப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இயக்குநர் முருகதாஸ், குழந்தை பருவம் முதலே மகிழ்ச்சி அளித்து வருபவர் எஸ்.பி.பி. அவருக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி நாளை மாலை 6 மணிக்கு நடக்க உள்ள ஒரு நிமிடம் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.