நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ளார்.  டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இவருக்கு முதலில், டாக்டர் ஆக வேண்டும் என்று தான் ஆசையாம். ஆனால் நடனத்தின் மீது இருந்த காதல் காரணமாக காலம் இவரை சிறந்த நடன இயக்குனராக மாற்றிவிட்டது.

தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ ஓவியாவ விட்டா யாரு “ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “ உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “ நேத்ரா “ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியதோடு அந்த படத்தில் இடம்பெறும் “ வந்துடாயா  வந்துடாயா குத்து பாட்டு பாட வந்துடாயா “ என்ற பாடலில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,  ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் நடனமாடி இருக்கிறார்.

சிறந்த நடன இயக்குனர் என்ற பெயர் எடுப்பதே எனது லட்சியம் என்கிறார் நடன இயக்குனர் பாரதி.