Independence Day 2022 : 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ் சினிமாவில் இடம்பெற்ற தேசபக்தி நிறைந்த டாப் 5 பாடல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று ஏராளமான பொதுமக்களும், திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இடம்பெற்ற தேசபக்தி நிறைந்த டாப் 5 பாடல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

தமிழா தமிழா பாடல் - ரோஜா திரைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் இடம்பெற்ற தமிழா தமிழா என்கிற பாடல் தேசபக்தி நிறைந்த பாடலாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்பாடல் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இப்பாடலை ஹரிஹரன் பாடி இருந்தார். இப்பாடலுக்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

தாயின் மணிக்கொடி பாடல் - ஜெய்ஹிந்த் திரைப்படம்

அர்ஜுன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜெய்ஹிந்த் என்கிற தேசபக்தி நிறைந்த படத்தில் இடம்பெற்ற தாயின் மணிக்கொடி என்கிற பாடல் இன்றலவும் சுதந்திர தின விழாக்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு பாடலாகும். வித்யாசகரின் இசையும், எஸ்.பி.பி.யின் பின்னணி குரலும் இப்பாடலுக்கு உயிர்கொடுத்தது. இப்பாடல் கடந்த 1994-ம் ஆண்டு வெளியானது.

இனி அச்சம் அச்சம் இல்லை பாடல் - இந்திரா திரைப்படம்

மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி இயக்கிய இந்திரா படத்தில் இடம்பெற்ற தேசபக்தி பாடல் தான் ‘இனி அச்சம் அச்சம் இல்லை’ என்கிற பாடல். இப்பாடலுக்கும் இசையமைத்தது ஏ.ஆர்.ரகுமான் தான். கடந்த 1995-ம் ஆண்டு வெளியான இப்பாடலை அனுராதா ஸ்ரீராம், ஜிவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து பாடினர். மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தேசபக்தி பாடல்களில் இதுவும் ஒன்று.

கப்பலேறிப் போயாச்சு பாடல் - இந்தியன் திரைப்படம்

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்த மற்றுமொரு மறக்க முடியாத தேசபக்தி பாடல் என்றால் அது கப்பலேறிப் போயாச்சு என்கிற பாடல் தான். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்று இருந்தது. வாலியின் பொன்னான வரிகளில் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியமும், பி.சுசிலாவும் இணைந்து இப்பாடலை பாடினர். தேசப்பற்று, காதல், வீரம் என அனைத்தும் கலந்த கலவையாக இப்பாடலை கொடுத்திருந்தார் வாலி.

வந்தே மாதரம் - ஏ.ஆர்.ரகுமானின் ஆல்பம் பாடல்

பல்வேறு படங்களில் தேசபக்தி பாடல்களுக்கு மெட்டமைத்து ஹிட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக வந்தே மாதரம் என்கிற ஆல்பம் பாடலை வெளியிட்டார். அவரது வசீகர குரலிலேயே 1997-ம் ஆண்டு வெளியான இப்பாடலை இன்று கேட்டால் கூட புல்லரிக்கும் அளவுக்கு மிகுந்த தேசபக்தியோடு பாடி இருப்பார் இசைப்புயல். இப்பாடலும் காலத்தால் அழியாத காவியம் என்றே சொல்லலாம்.