மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை பாவனா சமீபத்தில் இவருக்கு நடந்த ஒரு கொடூர சம்பவத்திற்கு பிறகு எந்த ஒரு மீடியாவையும் சந்தித்து பேசாமல் தவிர்த்து வந்த பாவனா தற்போது முதல் முறையாக மீடியாக்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்.., மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்தவித சுதந்திரமும் கிடையாது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை எடுப்பது ஒருசிலர் தான். பெரும்பாலும்   கதாநாயகர்களை மையமாக வைத்துதான் மலையாள சினிமா இயங்குகிறது. 

மேலும் மலையாள சினிமாவில் ஆணாதிக்கம் என்பது மிகவும் அதிகம்.  இதனால் கதாநாயகிகள் வளரமுடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். திரைப்பட விற்பனை முதல் அனைத்தும் கதாநாயகர்களை முன்வைத்து தான் நடக்கிறது. எந்த நடிகைக்காகவும் யாரும் படத்தை போட்டிபோட்டு வாங்குவது கிடையாது. சம்பளத்தையும் உயர்த்தி தரமாட்டார்கள் என்பது தான் மலையாள சினிமாவின் உண்மை முகம்.

அதே போல் மலையாள சினிமாவில்  பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் இதுவரை பட வாய்ப்புக்காக யாரிடமும்  கெஞ்சியது இல்லை. இதன் காரணமாக நான் பல நல்ல படங்களின் வாய்ப்புகளை கூட இழந்திருக்கிறேன் என மிகவும் வருத்தத்தோடு கூறியுள்ளார் பாவனா. 

மேலும் தற்போது சினிமா துறையில் பல இடையூறுகள் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இந்த துறைக்கு வரவேண்டும் என கூறிய பாவனா நான் மீண்டும் பல்வேறு  கசப்பான சில சம்பவங்களில் இருந்து மீண்டு வருவதற்கு எனது ரசிகர்கள் அளித்த மனவலிமையும், எனது குடும்பத்தினர் கொடுத்த மன தைரியமும் தான் பெரிதும் உதவியது. நீங்கள் என்னுடன் இருக்கும் வரை நான்  எந்த சோதனை வந்தாலும் தைரியமாக இருப்பேன் என கூறியுள்ளார்.