விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்த படம் சைக்கோ கொலையாளியை கண்டறியும் சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு வெளியானது.
தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் FIR திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன் ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கௌதம் மேனனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ள விஷ்ணு விஷால். மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் டுவிட்டர் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
FIR திரைப்படத்தின் கதைக்களம் தீவிரவாதத்தை பற்றியும், அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுவது பற்றியும் அதிகம் பேசி உள்ளதால் மேற்கண்ட 3 நாடுகளில் இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ‘இர்ஃபான் அஹமத்’ என்ற இஸ்லாமிய இளைஞராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
