ban for Bhaskar oru rascal has actor vimal petition
அரவிந்தசாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விமல், நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விமல் திடீரென நடிகர் சங்கத்தில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
விமல் அளித்துள்ள புகார் மனுவில்,”தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் ‘ஜன்னல் ஓரம்‘ என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாமல் பணப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தார் தயாரிப்பாளர் முருகன்.
அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து நான் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனிடமிருந்து 25 இலட்சமும், இலட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமிருந்து 65 இலட்சமும் கடனாக பெற்று முருகனிடம் கொடுத்தேன்.
நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து ஒரு ரூபாய் கூட எனக்கு திரும்பி வரவில்லை. ஆனால், நிதியுதவி செய்தவர்களுக்கு வட்டியோடு திருப்பித் தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உள்ளாகி, தொழில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முருகன், அவருடைய மனைவி பெயரில் தயாரித்து திரைக்கு வரவிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட வெளியீட்டிற்கு முன் என்னுடைய பணத்தைப் பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
