கட்டக் கடைசியில் ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பரான பாக்யராஜும்  அவரை  விமர்சித்துக் கொட்ட துவங்கிவிட்டார் பாவம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா எனும் வாதம் ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவருக்கு சாதகமாக பேசிய அவரது மிக நெருங்கிய நணபர் ஒருவர் ”அரசியலுக்கு வருவதில் ரஜினிக்கு பயமில்லை. ஆனால் தயக்கம் உண்டு. அதாவது இயல்பாகவே யார் மீது கோள் சொல்வது, திட்டுவது, விமர்சிப்பது போன்ற பழக்கம் ரஜினியிடம் கிடையாது. ஆனால் அரசியலுக்குள் வந்தால் இதையெல்லாம் செய்தாக வேண்டியது அவசியம். எதிர்க்கட்சியை திட்ட வேண்டும், அவர்கள் நம்மை திட்டுவதையும் சகிக்க வேண்டும். இதெல்லாம் ரஜினிக்கு பிடிக்காத விஷயங்கள். இதனாலேயே தயங்குகிறார்!” என்றார். ரஜினி எதற்காக தயங்குகிறாரோ அந்த பிரச்னையெல்லாம் அவர் அரசியலுக்கு வரும் முன்பேயே துவங்கிவிட்டதுதான் சோகம். அவரது நண்பர்களே அவரை கிழித்தெடுக்க துவங்கிவிட்டனர். ரஜினிக்கு மிகப்பெரிய பிரேக்கினை தந்த ‘பதினாறு வயதினிலே’ படத்தின் இயக்குநர் பாரதிராஜா, ரஜினியை  விமர்சித்துக் கொட்டுகிறார். 

பாரதிராஜாவின் சிஷ்யரான பாக்யராஜ், ரஜினியின் நீண்டகால  நல்ல நண்பர். அவரே இப்போது ரஜினியை விமர்சித்து தாளிக்க துவங்கியிருப்பதுதான் அதிர்ச்சியே. பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் அவர் ரஜினியை வெளுத்திருக்கும் ஹைலைட் விமர்சன வார்த்தைகள் இவைதான்....” ரஜினி அரசியலுக்கு வருவார் எனும் நம்பிக்கை இருக்கிறதா?ன்னு கேக்கிறாங்க. இப்ப, கமல் கட்சி துவங்கி ஒரு பெரிய தேர்தலை சந்திச்சார். அவருக்கு மக்கள் என்ன வாக்கு கொடுத்தாங்கன்னு நமக்கெல்லாம் தெரியும். இப்ப இவரு கட்சி தொடங்கப்போறேன்னு சொல்றார். மக்களும் ‘இவரு வருவாரு,  ஏதோ செய்வாரு’ன்னு எதிர்பார்க்கிறாங்க. ஆனால் அவரோ அடுத்த அடுத்த படத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டுட்டு போயிட்டே இருக்கார். 

மக்களுக்கு உதவணும்னு நினைக்கிறவர் ‘சரி நாம படம் நடிச்சது போதும், சம்பாதிச்சது போதும். மக்களுக்குன்னு இறங்கி வேலை செய்வோம்’ அப்படிங்கிற தீர்மானத்தோட வந்துட்டா பரவாயில்லை. அப்படி வந்தால் அவர் பின்னாடி வர நிறைய பேர் இருக்கிறாங்க. இல்லேன்னா சந்தேகம்தான் வரும். 
ரஜினியோட அரசியல் விவகாரத்தை நானும் மூணாவது மனுஷனாதான் பார்க்கிறேன் பாஸ்.” என்று முடித்திருக்கிறார். 
பாக்யராஜ் ஏன் இப்படி பாய்ந்து பறாண்டியிருக்கிறார்? என்று சலசலப்பு கிளம்பிட, அதற்கு பதிலளிக்கும் ரஜினி தரப்போ “பல வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்து, எந்த ஜொலிப்பையும் எட்ட முடியாமலும், பல கட்சிகளுக்கு தாவியும் கூட எந்த பதவியையும் பெற முடியாமலும் தோற்றவர் பாக்யராஜ். ஆனால் அரசியலுக்கே வராத ரஜினிக்கு பல வருடங்களாக இருக்கும் செல்வாக்கைப் பார்த்து மிக கடுமையாக நொந்திருக்கிறார். அதன் வெளிப்பாடே இது.” என்கிறார்கள். 
சர்தான்!