பேட் கேர்ள் படத்தில் நடித்துள்ள நடிகை சாந்தி பிரியா, தமிழ் சினிமா தான் தனக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்ததாக கூறி இருக்கிறார்.
Bad Girl Actress Shanti Priya Exclusive Interview : வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தை வர்ஷா பரத் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டீஜே அருணாச்சலம், ஷஷாங்க் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பேட் கேர்ள் திரைப்படம் சென்சாரில் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததால் இதன் ரிலீஸ் தாமதமாகி இருந்தது. தற்போது ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. வருகிற செப்டம்பர் 5-ந் தேதி பேட் கேர்ள் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
சாந்தி பிரியா எக்ஸ்குளூசிவ் பேட்டி
இந்த நிலையில், பேட் கேர்ள் படத்தின் நாயகி சாந்தி பிரியா, நமது ஏசியாநெட் சேனலுக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில், பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள உங்களுக்கு எந்த மொழியில் நடித்தது மிகவும் பிடித்திருந்தது என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு மொழியிலும் எனக்கு நல்ல அனுபவம் இருந்தது. ஆனால் நான் தமிழை தேர்வு செய்கிறேன். ஏனெனில் தமிழ் படங்கள் தான் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது.
பிறந்த குழந்தை போல தான் நான் தமிழ் திரையுலகுக்கு சென்றேன். என்னுடைய அக்கா அங்கு நடித்து வந்தார். இருந்தாலும் ஒரு புதுவரவாக, நான் வந்தபோது எனக்கு அனைத்தையும் கற்றுத்தந்தது தமிழ் சினிமா தான். எனக்கு ஒழுக்கத்தையும், சரியாக நேரத்தை கடைபிடிப்பது, பணிவாக இருப்பது ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தது. இதற்காக நான் தமிழ் திரையுலகிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதேபோல் இந்தியில் நடித்தபோதும் எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன எனவும் சாந்தி பிரியா கூறி இருக்கிறார்.
நடிகை சாந்தி பிரியா, தமிழில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் செண்பகமே பாடலில் ராமராஜன் ஒருவரை பார்த்து உருகி உருகி பாடி இருப்பார் அவர் தான் சாந்தி பிரியா. இதையடுத்து கைநாட்டு, பூவிழி ராஜா, என் வழி தனி வழி, எல்லாமே என் தங்கச்சி, அஞ்சலி, உயர்ந்தவன் போன்ற படங்களில் நடித்தார். 1992-ம் ஆண்டுக்கு பின் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சாந்தி பிரியா, சுமார் 32 ஆண்டுகள் கழித்து பேட் கேர்ள் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
