சில வருட இடைவெளிக்குப்பின் சேரன் இயக்கியிருக்கும் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ பட பாடல் மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டுவிழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. சேரனின் சில புத்திசாலித்தனமான ஏற்பாடுகளால் கமலா திரையரங்கம் தனது அடையாளம் இழந்து ஒரு கல்யாணமண்டபமாகவே மாறியிருந்தது என்பது தான் உண்மை.

திரையரங்கின் முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவாயில் போல் வாழைமரம், தோரணங்கள் கட்டி அலங்கரித்துள்ளதோடு முகப்பிலிருந்து திரையரங்கின் நுழைவாயில்வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். திரையரங்கில் நுழைந்ததும் நம்மூர்ப் பாரம்பரிய தவில் - நாதஸ்வரக் கச்சேரி,பரவசம். 

சேரன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் வேட்டி சட்டை, பட்டுப் புடவை என மங்களகரமாக வருகை தந்து தியேட்டரை திருவிழாவாக்கிக் கொண்டிருக்க, பலருக்கும் நிஜமான கல்யாணத்துக்கு போய்விட்ட உணர்வுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

தனது மறுமணத்தை மிக அழுத்தமாக பதிவு செய்யவிரும்பியோ என்னவோ தமிழின் மூத்த கலைஞர்கள் இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜாவில் துவங்கிய சமீபத்தில் தமிழ்சினிமாவில் முத்திரை பதித்த லெனின்பாரதி, மாரி செல்வராஜ் வரை விழாவுக்கு அழைத்திருந்தார் சேரன். படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.