இனி ‘சர்கார்’ பட செய்திகளுக்கு ஆல் லாங்குவேஜ் அதாரிட்டி இயக்குநர் பாக்கியராஜ்தான் என்பது போல கடந்த ஒரு வாரமாக மீடியா விடாமல் அவரை தொடர்ந்து வருகிறது. தன்னைப்பற்றி ஆடியோ விழா செய்திகள் தவிர வேறு எதுவும் வருவதில்லை என்று நீண்டநாள் ஆதங்கத்தில் இருந்த பாக்கியராஜும் ‘சர்கார்’ குறித்த சர்ச்சைகளை, படக்கதையை, திரைமறைவு திருவிளையாடல்களை சற்றும் சளைக்காமல் அம்பலப்படுத்தி வருகிறார்.

இதன் லேட்டஸ்ட் மற்றும் ஹாட்டஸ்ட் செய்தி இந்த கதைத் திருட்டு விவகாரம் குறித்து நடிகர் விஜய் என்ன சொன்னார் என்பதுதான். ஏனென்றால் ஏதோ ஒரு உகாண்டா நாட்டுப்படத்துக்கு நடக்கும் சர்ச்சை போல ‘சர்கார்’ சர்ச்சை குறித்து அவர் இதுவரை வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து தான் விஜய்க்கு போன் செய்து பேசியதாக பாக்கியராஜ் வெளிப்படையாக  அறிவித்துள்ளார். அதில், ‘’ சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக நான் விஜய்க்கு போன் செய்து பேசினேன். செய்திகளில் பார்த்து தான் இது குறித்து தனக்கு தெரிய வந்ததாக அவர் என்னிடம் கூறினார்.  பரவாயில்லை. கதைக்கு நீங்க எப்பிடி பொறுப்பாக முடியும்? தர்மசங்கடமான ஃபீலிங்ஸ் எதுவும் இல்லாமல் உங்கள் வேலையை நீங்கள் செய்ங்க சார், முருகதாஸ் இதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வார் என்று தான் விஜயை ஆசுவாசப்படுத்தியதாக  பாக்யராஜ் கூறியுள்ளார்.