படம் தயாரான பிறகு சுமார் மூன்று வருடங்களாகக் கிடப்பில் இருக்கும் கவுதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’படத்துக்கு ‘அசுரன்’படத்தால் மாபெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. கடந்த வாரம் ரிலீஸான தனுஷின் ‘அசுரன்’ வசூலில் பிரித்து மேய்வதால் இப்படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’பட ரிலீஸ் தேதிகள் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போனதால் அது குறித்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வரும் அளவுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர் கவுதம் மேனனும் அவமானங்களைச் சந்தித்தனர். தயாரிப்பாளர் தரப்பு சுமார் ஒரு டஜன் ரிலீஸ் தேதிகளை அறிவித்தும் அத்தனை தேதிகளிலும் படம் வெளியாகவில்லை. ஸோ தனுஷ் ரசிகர்கள் ‘அப்படி ஒரு படத்துல நம்ம இளைய சூப்பர் ஸ்டார் நடிக்கலைன்னு நினைச்சுக்குவோம்’என்கிற அளவுக்கு விரக்தி அடைந்தனர்.

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ள கவுதம் மேனன் அப்பணத்தைக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்க, அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 15ம் தேதி ‘எ.நோ.பா.தோ’ரிலீஸ் என்று அறிவித்தார் கவுதம். அந்த செய்தியையும் விநியோகஸ்தர்களோ தியேட்டர் உரிமையாளர்களோ பெரிதும் கண்டுகொள்ளாமல்தான் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி ரிலீஸான தனுஷின் ‘அசுரன்’படம் பெரும் ஹிட்டடித்து வசூலை அள்ளிக்கொண்டிருப்பதால் ‘எ.நோ.பா.தோ’வுக்கு திடீர் ஜாக்பாட் அடித்துள்ளது. தமிழகம் முழுமையும் ‘அசுரன்’படத்தை சொந்தமாகவே ரிலீஸ் பண்ணியுள்ள வகையில் தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு 20 கோடிக்கும் மேல் லாபம் கிடைக்கும் அளவுக்கு அசுர வெற்றிப்படமாம் அசுரன்.