விஜய் படத்தின் வசூலை விரட்டி பிடித்த ”அசுரன்”... ’பிகில்’ கிளப்பும் தனுஷ்..!

தனுஷின் எந்த படங்களும் செய்யாத அசாத்திய சாதனையை ”அசுரன்” செய்து காட்டியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன் தயாரித்த, அசுரன் திரைப்படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனுஷ் தூள் கிளப்பியிருந்தார். பஞ்சமி நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அசுரன் திரைப்படம், தற்போது அரசியல் களத்திலும் விவாத பொருளாக மாறியுள்ளது.  ”அசுரன்” திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், அதை பற்றி ஆஹா...ஓஹோ என புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, பிரச்சனை ஆரம்பமானது. அதற்கு பதிலடி கொடுப்பதாக களத்தில் இறங்கிய ராமதாஸ், முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலத்தில் தான் என்றும், அதை திருப்பிக் கொடுக்க ஸ்டாலின் தயாரா? என்றும் பிரச்னையை கிளம்பினார். 

இதனை முற்றிலும் மறுத்த ஸ்டாலின், முரசொலி கட்டிடம் உள்ள இடத்தின் பத்திரத்தை டுவிட்டரில் பதிவிட்டு, அது பஞ்சமி நிலம் தான் என்பதை முடிந்தால் ராமதாஸ் நிரூபிக்கட்டும் என சவால் விட்டார். இப்படி திமுக, பாமக இடையே டுவிட்டர் சண்டை முற்றி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் "அசுரன்" திரைப்படம் சாதனை படிக்கட்டுகளை எட்ட ஆரம்பித்துள்ளது. அது சாதாரண சாதனை அல்ல, அசாத்திய சாதனை என்றே கூற வேண்டும். ஏனென்றால் தனுஷின் எந்த படங்களும் இதுவரை 100 கோடி ரூபாய்  கூட வசூல் செய்யாத நிலையில், அசுரன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்து அதிரடி காட்டியுள்ளது. 

அக்டோபர் 4ம் தேதி வெளியான ”அசுரன்” திரைப்படம், முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் கல்லாகட்டியது. அதனை முறியடிக்கும் வகையில் உலகம் முழுவதும் ”அசுரன்” வெளியான திரையரங்குகளின் ஒட்டுமொத்த வசூலையும் சேர்த்து, இப்போது 150 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. இந்த வசூல் ”பிகில்” போன்ற மாஸ் படங்களின் பட்ஜெட் தொகை தான் என்றாலும், தனுஷின் எந்த படமும் 100 கோடியை தாண்டியது இல்லை என்பது தான் சுவாரஸ்ய தகவல். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியான ”பிகில்” திரைப்படம் சில நாட்களிலேயே இந்த வசூலை எட்டக்கூடும் என்றாலும், #AsuranJoins150CrClub என்ற ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.