கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை தமிழ், இந்தி,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்க எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தியாவில் வெளியான மிகப்பெரிய வரலாற்று படமான பாகுபலியை முறியடிக்கும் வகையில், பிரம்மாண்டமாக "பொன்னியின் செல்வன்" உருவாக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். 

சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு பாகங்களாக தயாராக உள்ள இந்த படத்தை லைகா புரோடக்‌ஷன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒளிப்பதிவை ரவிவர்மாவும், செட் பணிகளை தோட்டா தாரணியும் மேற்கொள்ள உள்ளனர். படத்திற்காக பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்படும் என்றும், அதில் 100 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. "பொன்னியின் செல்வன்" படப்பிடிக்கான இடங்களை உறுதி செய்வதற்காக தாய்லாந்தில் முகாமிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். 

இதற்காக தாய்லாந்தில் மணிரத்னமும், ஸ்டேண்ட் மாஸ்டர் ஷாம் கவுசலும் படகில் செல்லும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. சோழர்களின் வரலாற்று பின்னணியைக் கொண்ட கோவில்கள் இருப்பதால் தாய்லாந்தில் லோக்கேஷன் தேடும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

நீண்டு கொண்டே போகும் பொன்னியின் செல்வன் ஹீரோ,  ஹீரோயின்கள் பட்டியலில், 'அசுரன்' படத்தில் தனுஷ் மகனாக நடித்த டிஜே அருணாசலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிஜே, "ஒரு அற்புதமான டீமில் சேர்ந்து பணியாற்றுவதற்காக, 2 மாதங்களாக ஜிம்மில் கடும் பயிற்சி செய்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்". இதில் எந்த தகவலும் இல்லையே என நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பதிவிற்கு கீழ் #December, #shooting, #AR Rahman போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி இருப்பது சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது. அடுத்த மாதம் ஷூட்டிங்கை தொடங்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளதும் ஏ.ஆர்.ரகுமான் தான் என டிஜே போட்ட ட்வீட்டின் மூலம் அவர் மணிரத்னம் படத்தில் இணையலாம் என்று நம்பப்படுகிறது.