பிரபல பத்திரிகையாளரும் திரைப்பட பாடலாசிரியருமான நெல்லைபாரதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரது ஒரு கால் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜோதிடர் நெல்லை வசந்தன் அவருக்கு சக்கர நாற்காலியுடன் பொருளுதவியும் வழங்கியுள்ளார்.

சுமார் 40 ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர் நெல்லைபாரதி. மிகச் சிறந்த கவிஞர். சில திரைப்படங்களுக்கு பிரமாதமான பாடல்களும் எழுதியுள்ளார். தீராக் குடிநோய்க்கு ஆட்பட்டிருந்த அவர் சில காலமாக உடல்நலமில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து நிலையில் சர்க்கரை நோய் அதிகமானதால் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையின்போது அவரது இடது கால் முட்டி வரை அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.

ஒரு பத்திரிகையாளருக்கு நேர்ந்த சங்கடத்தை உணர்ந்த பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் நெல்லை பாரதியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு ஒரு நல்ல தரமான சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்ததோடு சில பொருளுதவிகளும் செய்தார். இச்செய்தியை நெல்லை பாரதி தனது முகநூல் பக்கத்தில்,...பொய் சொல்லத் தெரியாத ஜோதிடர்- நெல்லை வசந்தன் அன்பளித்த வாகனம்...சக்கர 'நாற்காலி'யில் 'ஒன்றரைக் காலி'யாக நான்...என்று பதிவிட்டிருக்கிறார்.