செகப்பா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் என்கிற கதையாக செகப்பாக இருக்கிற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா வரலாற்றுப் படம் ஒன்றில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் அர்விந்த் சாமி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை ‘தலைவி’என்ற பெயரில் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.இதைப்படமாக்குவதற்கான அனுமதியை ஜெ’ குடும்பத்தினரிடமிருந்து முறைப்படி பெற்றிருக்கும் அவர், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பை துவக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜெ’ வேடத்தில் நடிப்பதற்காக முறைப்படி பரதநாட்டியம், தமிழ்ப்பயிற்சி எடுத்துவரும் கங்கனா ரனாவத் சமீபத்தில், தன்னை முன்னாள் முதல்வர் தோற்றத்தில் மாற்றிக்கொள்ள எடுத்துவரும்  மேக் அப் பயிற்சிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இப்படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு மிக மும்முரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் முக்கியமான பாத்திரமான எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க பல நடிகர்கள் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது அந்த வேடத்துக்கு நடிகர் அர்விந்த் சாமியை உறுதி செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இச்செய்தி வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில் ‘செகப்பா இருக்கிறாருங்குறதைத் தவிர எம்.ஜி.ஆர் வேஷத்துக்கு எந்த வகையிலும் பொறுத்தமில்லாதவர் அர்விந்த்சாமி என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.