நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி எம்.எல்.ஏ. தேர்தல் வரை அனைத்திலும் போட்டியிடத் துடிக்கும் நடிகர் விஷால் முதலில் ஒழுக்கமாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டும்’ என்று பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசினார்.

சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘தெளலத்’. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் விஷால் குறித்து காரசாரமாகப் பேசினார்,“பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும்.இந்தப் படத்தின் தலைப்பு ’தெளலத்’. தெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. ஆனால் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் நடிகர் ஜீவா நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவேச் சொல்கிறேன்,இப்போது நடிகர் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் விஷால் போட்டியிடுகிறார். ஒருவர் பதவிக்கு வரவேண்டுமென்றால் அவர் முதலில் சரியாக இருக்கவேண்டும்.ஆனால் விஷால் அப்படி இல்லை, அண்மையில் கூட அவர் நடித்த அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளானார். அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும். அதுமட்டுமல்ல இவர் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பதோடு தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போகிறார். அப்புறம் எம் எல் ஏ எலெக்‌ஷனில் நிற்கிறார்.இப்படியே போனால் எதைத்தான் ஒழுங்காகச் செய்ய முடியும்?’என்று விஷாலுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரமாக தனது பேச்சை மாற்றிக்கொண்டார் அருண்பாண்டியன்.