தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்த போது, இந்த படத்தை முதலில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ்வை  நாயகனாக வைத்து இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என கூறி, இந்த படம் கைவிடப்பட்டதாக திடீர் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது இந்த படத்தை தயாரித்த E4 Entertainment நிறுவனம்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்   , இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தது.

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு, இயக்குனர் பாலாவின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படத்தை, 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் இயக்குனர் கிரிசையா  இயக்கினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை. 

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' படத்தின் வெர்ஷனை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவில் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானாலும், இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது இதுகுறித்து E 4 entertainment நிறுவனம் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ திரைப்படம் அக்டோபர் 6ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் தமிழில் 'ஆதித்திய வர்மா என்கிற பெயரில் வெளியானாலும், பாலாவின் வெர்ஷனை பார்க்க ஆவலோடு கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.