ஏழைப்பெண்ணுக்கு மசூதியில் இந்து முறைப்படி நடந்த திருமணம்... ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த கேரளா ஸ்டோரி வீடியோ வைரல்
ஏழைப்பெண்ணுக்கு இந்து முறைப்படி மசூதியில் வைத்து திருமணம் நடத்தப்பட்டது குறித்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படம் வருகிற மே 5-ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்குள் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப காரணம் அப்படத்தின் டிரைலரில் காட்டப்பட்ட விஷயங்கள் தான். இது கேரளாவில் நடைபெற்ற உண்மைக்கதை என குறிப்பிட்டுள்ள அந்த டிரைலரில், கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்த்தவ மதத்தை சேர்ந்த பெண்களை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து, அவர்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக காட்டியுள்ளனர்.
இதனால் கொந்தளித்த கேரள அரசியல் தலைவர்கள் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். மதக்கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ள இப்படத்தை வெளியிடக்கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயனும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது உண்மை என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசாக தருவதாக கேரளா முஸ்லீம் யூத் லீக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இப்படி கேரளா ஸ்டோரி பற்றி பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ள கேரளா ஸ்டோரி வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள செருவல்லியில் மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றதை காட்டி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரெட் ஜெயண்ட் வசம் சிக்கி படாதபாடு படும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்..!
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு மற்றும் சரத் ஜோடியின் திருமணம் தான் இது. ஏழைப்பெண்ணான மஞ்சுவின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் அவரது தாயார் கஷ்டப்பட்டுள்ளார். அவர் தனது மகளின் திருமணத்துக்கு உதவுமாறு செருவல்லியில் உள்ள மசூதி நிர்வாகிகளை அணுகியுள்ளார். அவர்கள் அந்த பெண்ணுக்கு 10 சவரன் நகை போட்டது மட்டுமின்றி ரூ.20 லட்சம் பணத்தையும் பரிசாக வழங்கி உள்ளனர். இதோடு நிறுத்திவிடாமல் அந்த ஜோடியின் திருமணத்தை தங்களது மசூதியிலேயே நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து தான் அஞ்சு - சரத் ஜோடியின் திருமணம் செருவல்லியில் உள்ள மசூதியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடந்துள்ளது. பொதுவாக முஸ்லீம்கள் நடத்தும் திருமணத்தில் அசைவ உணவு தான் போடப்படும், ஆனால் இது இந்து முறைப்படி நடந்த திருமணம் என்பதால் இதில் 1000 பேருக்கு சுத்த சைவ உணவை பரிமாறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர் மசூதி நிர்வாகிகள்.
மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழ்ந்த இந்த திருமண வீடியோவை தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவர்களுக்கு பாரட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... திரிஷா பிறந்தநாளுக்கு தளபதி விஜய் மற்றும் லியோ படக்குழு கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ்