- Home
- Cinema
- ரெட் ஜெயண்ட் வசம் சிக்கி படாதபாடு படும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்..!
ரெட் ஜெயண்ட் வசம் சிக்கி படாதபாடு படும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, சரிதா, புஷ்பா வில்லன் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் படுஜோராக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை முதலில் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஜூன் மாத இறுதியில் பக்ரீத் பண்டிகை வருவதால் அந்த சமயத்தில் ரிலீஸ் செய்தால் நல்ல வசூலை அள்ளலாம் என பிளான் போட்டு வைத்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் திரைக்கு வருவதால் மாவீரன் படத்தின் ரிலீசை தள்ளிவைத்தனர்.
இதையும் படியுங்கள்... செல்பி எடுக்கவந்தது குத்தமா... ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்த ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
இதன்பின்னர் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. தற்போது அந்த ரிலீஸ் தேதிக்கும் சிக்கல் வந்துள்ளது. அதன்படி நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தையும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான அறிவிப்பும் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதனால் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அறிவித்த தேதிக்கு முன்னதாகவே மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். ஏற்கனவே ஆகஸ்ட் 11-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட உள்ளதாம். மாவீரன் படம் இப்படி பந்தாடப்படுவதற்கு முக்கிய காரணம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் என கூறப்படுகிறது. அந்நிறுவனம் தான் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி வைத்துள்ளது. அதேபோல் மாமன்னன் மற்றும் ஜெயிலர் படங்களின் ரிலீஸ் உரிமையும் ரெட் ஜெயண்ட் வசமே உள்ளது. இதன் காரணமாக தான் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... வயசு 40 பிளஸ் ஆனாலும் பியூட்டி குறையல! குழந்தை முதல் குந்தவை வரை... நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் இதோ